Published : 19 Feb 2020 05:12 PM
Last Updated : 19 Feb 2020 05:12 PM

மகா சிவராத்திரியில் தானம் செய்தால் மகா புண்ணியம்! 

வி.ராம்ஜி

சிவராத்திரி என்பது மாதந்தோறும் வரும். ஒவ்வொரு மாதமும் வருகிற சிவராத்திரியே சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இதையே மகா சிவராத்திரி என்று போற்றுகிறோம்.


மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி பலன்களையும் புண்ணியங்களையும் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அம்பிகைக்கு நவராத்திரி... ஆடல்வல்லானுக்கு ஒரே ராத்திரி... சிவராத்திரி என்பார்கள்.


ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட, உலகமே அழிந்தது. மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என அன்னை பார்வதிதேவி விரதம் இருந்து, சிவனாரின் இடபாகத்தைப் பெற்றாள். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்கிறது புராணம்.


பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவனாரின் அடிமுடி தேடிய கதை தெரியும்தானே. அடியையும் தொடமுடியாமல், முடியையும் தொடமுடியாமல் நொந்து போனார்கள் இரண்டுபேரும். அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக நின்று விஸ்வரூபமெடுத்து தரிசனம் தந்தார் ஈசன். அந்தநாள்தான் மகா சிவராத்திரி நன்னாள் என்றும் சொல்லப்படுகிறது.


மகா சிவராத்திரி மகிமைகளை சிவனார் நந்திதேவரிடம் சொல்ல, அவர் தேவர்களிடமும் முனிவர்களிடமும் தெரிவித்தார். இதை அறிந்து, சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளாத தெய்வங்களே இல்லை என்கிறது புராணம். முருகக்கடவுள், எமன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, குபேரன் முதலானோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு, தவமிருந்து பூஜைகள் செய்து, சிவனருளைப் பெற்றதாகச் சொல்கிறது.
மகா சிவராத்திரி நன்னாளில்தான், மகாவிஷ்ணு சிவனாரை நோக்கி தவமிருந்தார். சக்ராயுதத்தை வரமாகப் பெற்றார். ஸ்ரீலட்சுமியானவளை மனைவியாக அடைந்தார். சிவனருளை வேண்டி பிரம்மா தவம் மேற்கொண்டார். சரஸ்வதிதேவியை துணைவியாகப் பெற்றார்.


மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு, தூக்கம் வராமல் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தது. அப்படி கீழே போடப்படும் இலைகள் வெறும் இலைகள் அல்ல. அது வில்வமரம். அந்தக் குரங்கு வில்வ இலைகளை பறித்துப் பறித்து கீழேப் போட்டது.
அந்த வில்வ இலைகள் தரையில் விழவில்லை. மரத்தடியில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் விழுந்தபடியே இருந்தன. விடிய விடிய... தெரிந்தோ தெரியாமலோ சிவலிங்கத்துக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்திருந்தது குரங்கு.


அதுமட்டுமா? அன்றைய நாள் சிவராத்திரி. இதில் குளிர்ந்து மகிழ்ந்த சிவபெருமான், அந்தக் குரங்குக்கு மோட்சம் அளித்தார். சிவராத்திரி விரத பலன் கிடைக்கப் பெற்ற அந்தக் குரங்கு, முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருளினார். குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு, சோழச் சக்கரவர்த்தியாக வாழ்ந்தார் முசுகுந்தச் சக்கரவர்த்தி என்கிறது புராணம்!


எனவே, மகா சிவராத்திரி நன்னாளில் விரதம் இருந்து சிவனாரைத் தரிசித்தால் சகல வளங்களும் பெறலாம். முக்தி அடையலாம். மகாசிவராத்திரிக்கு முதல்நாளான திரயோதசி அன்று ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம் மேற்கொள்ளவேண்டும். இயலாதவர்கள், வயதானவர்கள், எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். விரதம் கடைப்பிடிக்க இயலாதவர்கள் பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
மறுநாள், சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில் நான்கு ஜாமங்களில் நான்கு கால பூஜைகளை தரிசிக்கலாம். அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு சிவபாராயணம் செய்யலாம். ருத்ரம் பாராயணம் செய்யலாம்.


முடிந்த அளவு, ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்வது மகா புண்ணியம் என்கின்றன சாஸ்திரங்கள்
மகா சிவராத்திரி விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்து, தானங்கள் செய்பவர்களுக்கு சிவ கடாட்சம் நிச்சயம் உண்டு. சிவனருள் கிடைக்கப் பெற்று, ஆனந்தமாக வாழலாம்.

21.02.2020 மகா சிவராத்திரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x