

இன்று நம் கண் முன்னால் எத்தனை செல்வந்தர்கள் நினைத்ததை உண்ணும் உடல்நலத்துடன் இருக்கிறார்கள் என்று விரல் விட்டு எண்ணிப்பாருங்கள். எருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பூர்வ இஸ்ரவேலை அரசாண்ட சாலமோன், “எருசலேமில் எனக்கு முன் இருந்த எல்லாரையும்விட நான் பெரிய செல்வந்தன் ஆனேன்” என்றார்.
அதேசமயம், “அவை யாவும் வீண் . அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்” என்ற அனுபவ உண்மையையும் மறைக்காமல் சொல்லியிருக்கிறார். அப்படியானால் சாலமன் எதை நிலையான செல்வம் என்கிறார்? “கடவுளின் அன்புக்குப் பாத்திரமான மனிதனாக வாழ்வதுதான், பரலோகத் தந்தையின் ஆசிர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் (பிரசங்கி 2:9 -11)” என்று கூறினார்.
வழிமொழிந்த இயேசு
சாலமோனுக்குப் பின் தோன்றிய இறைமகன் இயேசு, நிலையற்ற செல்வம் பற்றியும் நிலையான நிஜமான செல்வம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். இதை மத்தேயு அதிகாரம் ஆறில் காண முடியும். செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்று ஓடுகிறவர்களைப் பார்த்து இயேசு சொன்னார்:
“பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள். பூச்சியும் கரையானும் அவற்றை அரித்துவிடும். திருடர்களும் அவற்றைத் திருடிக்கொண்டுபோய் விடுவார்கள். மாறாக, பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியோ கரையானோ அரிக்காது, திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கும்” என்றார்.
இன்று ஒருபுறம் மக்கள் உணவு இல்லாமல் செத்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் உணவு வீணாக்கப்படும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். அதேபோல, தேவையான உணவு என்ற மனநிலை போய் ஆடம்பரமான அதிக கொழுப்பு நிறைந்த உணவை நோக்கி ஓடுகிறோம். இயேசுவோ உங்கள் உணவுக்காகக் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார்.
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்பது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உங்கள் உயிரும் உடையைவிட உங்கள் உடலும் அதிக முக்கியம் அல்லவா? வானத்துப் பறவைகளைக் கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை.
என்றாலும், உங்கள் பரலோகத் தந்தை அவற்றுக்கும் உணவளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா? கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன் ஆயுளோடு ஒரு நொடியைக் கூட்ட முடியுமா? உடைக் காக ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுப் பூக்கள் பூப்பதைக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சகல மேன்மையும் பெற்றிருந்த சாலமோன்கூட இந்தப் பூக்களைப்போல் உடுத்தியதில்லை.”
இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுப் புல்லுக்கே கடவுள் இப்படி உடுத்திவிடுகிறார் என்றால், உங்களுக்கான உடை எவ்வளவு நிச்சயம்! அதனால், எதைச் சாப்பிடுவோம்? எதைக் குடிப்போம்? எதை உடுத்துவோம்? என்று ஒருபோதும் கவலைப்படாமல் இருங்கள். இவற்றையெல்லாம் பெறுவதற்கு உலகத்தார்அலைந்து திரிகிறார்கள். ஆனால், இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தந்தை அறிந்திருக்கிறார் என்றார்.
கடவுள் அளித்த நெறி
அப்படியானால் உழைக்காமலேயே கடவுள் இதையெல்லாம் நமக்குத் தந்துவிடுவாரா என்ன? அதுதான் இல்லை. உழைப்பது என்பது கடவுள் நமக்கு அளித்த நெறிகளில் ஒன்று. நேர்மையாக உழைத்துக்கொண்டே கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்கிறார் இயேசு.
“முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றை யெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்” என்கிறார். கடவுள் நம்மை நல்ல கனி தரும் மரமாக வாழ்ந்திருக்கச் சொல்கிறார். நேர்மையினால் விளைந்த அளவான செல்வமே நிஜமான செல்வம் என்று எடுத்துக் காட்டுகிறார்.
“முட்செடிகளிலிருந்து திராட்சைப் பழங்களையும், முட்புதர்களிலிருந்து அத்திப் பழங்களையும் யாராவது பறிப்பார்களா? நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும், கெட்ட மரமெல்லாம் கெட்ட கனியைக் கொடுக்கும்; நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்க முடியாது, கெட்ட மரம் நல்ல கனியைக் கொடுக்க முடியாது. நல்ல கனி கொடுக்காத மரமெல்லாம் வெட்டப்பட்டு, நெருப்பில் போடப்படும்” என்கிறார் இயேசு.
நேர்மையற்ற வழியிலும் தேவைக்கு அதிகமாகவும் நீங்கள் சேர்க்கும் செல்வத்தை நீங்கள் அனுபவிக்க முடியாதபடி அழிந்துபோகும் என்கிறார்.
பொருள் தேடும் நம் ஓட்டத்துக்கு மத்தியில் இவற்றைச் சிந்தித்துப் பார்க்கலாம்.