

பஜனை, உபன்யாசம் என மக்களைப் பக்திக் கடலில் மூழ்கவைக்கும் விட்டல் தாஸ் மகராஜுக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஜெயகிருஷ்ண தீட்சதர். இவர் தந்தை ராம தீட்சதர் (நாரயண தீட்சதரின் புதல்வர்). இன்றளவும் புகழ் பெற்ற உபன்யாசகராக விளங்கிவருகிறார். விட்டல் தாஸ் மகராஜை தியாகராய நகரில் அவர் தங்கியிருந்த பாலாஜி கல்யாண மண்டபத்தில் சந்தித்துப் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து.
நாம சங்கீர்த்தனத்தின் மகிமை
கலியுகத்தில் இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்வதற்கு நாம சங்கீர்த்தனம் ஒன்றுதான் சிறந்த உபகரணம். ஒரு முறை ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, விட்டலா, சிவா, முருகா என்று மனமுருகிக் கூறினாலே போதும் என்று மகான்கள் கூறியுள்ளார்கள்.
உபன்யாசம் பற்றி
சேங்காலிபுரம் தீட்சதர் பரம்பரையில் தோன்றிய நாரயண தீட்சதரும் அவர்களின் சகோதரர் அனந்தராம தீட்சதரும் இராமயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், பாகவத புராணம் எல்லவற்றிலும் உபன்யாசம் செய்வதில் புகழ்பெற்று விளங்கினார்கள். சிறு வயது முதல் நான் இவர்களின் சொற்பொழிவைக் கேட்டு வளர்ந்ததனால் தனியாக இவற்றைப் படிக்கவில்லை. என் தந்தையின் உபன்யாசங்ளை சுமார் 15 ஆண்டுகள் மேடையில் அவருடன் அமர்ந்து கேட்டதுதான் என் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.
பாண்டுரங்கர் கோயில் உருவான விதம்:
நான் எனது குருவாக ஸ்வாமி ஹரிதாஸ் கிரியையும்,கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்களையும் பாவிக்கிறேன். அவர்களின் பரிபூர்ண ஆசிகளினாலேயே இது சாத்தியமானது. எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால்தான் அதனுடைய அருமை தெரியும் என்ற அவர்களின் இந்த அறிவுறையின்படி முதலில் மாதாமாதம் பல வீடுகளில் பஜனை செய்து அதில் கிடைத்த பணத்தில் இந்த இடத்தைத் தேர்வு செய்து வாங்கினோம்.
அதற்கே சுமார் 3 வருடங்கள் ஆனது. இந்த நிகழ்ச்சிகளில் பாண்டுரங்க பக்தர்களின் சரித்திரங்களும் அடங்கும். அந்த மகா பக்த விஜயத்தில் மராத்திய பக்திப் பாடல்களான அபங்கங்களையும் சேர்த்து பாடியது பக்தர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பக்தர்கள் பலர் பொருளுதவி செய்யத் தொடங்கினார்கள்.
கிருஷ்ண ப்ரேமி அண்ணா, ஆடுதுறையில் வசிக்கும் ஒரு பாண்டுரங்க பக்தையிடம் உன் உண்மையான பக்தியை மெச்சி ஒரு நாள் அந்த பாண்டுரங்கனே உன்னைக் காண இங்கு வருவார் என்று கூறினார். இந்த ஊருக்கு தட்சிண பண்டரிபுரம் என்ற பெயரையும் இட்டார். கிட்டத்தட்ட 17 ஆண்டு முயற்சிக்கு பிறகு 2011, குரு பூர்ணிமா அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது மராத்திய பாணியில் கட்டப்பட்டது. ஹரிதாஸ் கிரி ஆசிமற்றும் கிருஷ்ணப் ப்ரேமி அண்ணா அவர்களின் ஆசிகளும் சங்கல்பங்களுமே எல்லாவற்றுக்கும் காரணம்.
பசுப் பாதுகாப்பு பற்றி:
பாண்டுரங்கர் கோயிலை ஒட்டி ஒரு கோசாலையை அமைத்திருக்கிறோம். சுமார் 200 பசுக்கள் பிருந்தாவனத்திலிருந்தும், துவாரகையிலிருந்தும் கொண்டுவரப்பட்டவை. இன்று இவை இனப்பெருக்கமாகி ஏறக்குறைய 450 பசுக்கள் உள்ளன.
கோ சம்ரக்ஷணம் என்பதை ரிஷிகளும் முனிவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள். பசுக்களைப் பராமரிக்க உதவி செய்தால் பல வித நற்பயன்கள் நம்மை வந்து அடையும் என்பது முன்னோர்கள் வாக்கு. கோவிலுக்கு வரும் மற்ற மதத்தினரும் பசுப் பராமரிப்பிலும் ஈடுபடுகின்றனர். பசுக்களுக்குத் தீவனம் கொடுத்தும் பலர் உதவி வருகிறார்கள். ஒருவர் தன் வாழ்நாளில் 6 முறை கோ தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படிச் செய்ய முடியாதவர்கள் பசுக்களைப் பராமரிக்க உதவி செய்யலாம்.
பசுக்களின் கொண்டையைத் திமில் என்று அழைப்பர். இதில் சூரிய கேது நாடியின் ஓட்டம் உள்ளது. சூரிய ஒளி இத்திமிலில் படும்பொழுது ஏற்படும் கதிரியக்கம் அப்பசுக்களைச் சுற்றி 10 மீட்டர் தூரம்வரை பரவும். இந்த ஒளிப் பிரபையானது நச்சுகளையும், தீய சக்திகளையும் அழிக்கும் தன்மையைக் கொண்டது என்று ரிஷி முனிவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பசுக்களைப் பராமரிக்க ஆகும் செலவு ஒரு நாளுக்கு ரூபாய் 50,000 ஆகிறது. நாங்கள் பசுக்களை வைத்து வியாபாரம் ஏதும் செய்வதில்லை. பசுக்களின் கழிவுகளான கோமேயம் மற்றும் சாணம் இவற்றில் மருத்துவ குணங்கள் அடங்கி இருப்பதால் மாதாமதம் பல லட்சங்கள் வரை வருமானம் வர வாய்ப்புண்டு. ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல. கோமியத்திலிருந்து புற்று நோய்க்கு மருந்து கிடைகிறதாம். ஈரோடில் இதற்கான கோசாலை இயங்கிவருகிறது.