

கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்திருந்தாலும் பலநேரங்களில் அவரை விட்டு விலகிச் சென்றுவிடுகிறோம். அதற்குக் காரணம் கடவுளுக்கு விரோதமாகச் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறுவதாலும் பாவங்கள் பல செய்கிறோம்
நம் பாவ நிலையை நன்கு உணர்ந்து மனம் திருந்தியவர்களாய் அவரை நோக்கித் திரும்பி வர வேண்டும் என்று ஆவலோடு கடவுள் எதிர்பார்க்கிறார். இதற்காக அவர் நம்மை அன்புடன் அழைக்கவும் செய்கிறார். ஆனால் அவரது அழைப்பை நாம் புரிந்துகொள்வதில்லை. அவர் விரலை நீட்டும்போது நாம் அதைத் தட்டிவிடுகிறோம். மனம் திரும்புதல் என்பதை விவிலியம் இயேசு வழியாக எடுத்துக் காட்டுகிறது.
மூன்று உவமைகள்
பரலோகத் தந்தையின் ஒரே மகனாக உலகுக்கு வந்த இயேசு பாதை மாறிப்போன அல்லது தொலைந்துபோன பிள்ளைகளை மனம் திரும்ப வைத்து அவர்களை மீட்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவர் தனது பார்வையை, பாவிகளாக உழன்றுகொண்டிருந்த ஏழை மக்கள் மீதே முதலில் செலுத்தினார். இயேசுவை நம்பாத உயர்குடி யூதர்களில் ஒரு பிரிவினராக இருந்த பரிசேயர் அவரை இழிவாகப்பேசி, அவரது மனம் திரும்புதல் அழைப்பை நிராகரித்தனர்.
பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என இயேசுவைக் குறித்து பரிசேயர் குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றிக் கூறிய மூன்று உவமைக் கதைகளை அவர்களுக்குக் கூறினார். அவை நீதிமான்களுக்கன்றி பாவிகளின் மனம்திரும்புதலுக்காகவே அவை வலியுறுத்திக் கூறப்பட்டன. காணாமல் போன ஆடு உவமை; காணாமல் போன காசு உவமை; கெட்ட குமாரன் உவமை ஆகிய மூன்றும் இறைவனிடம் நாம் திரும்பி வர வேண்டும் என்ற ஒரே பொருளை கொண்டிருந்தன. இவற்றை விரிவாகத் தெரிந்துகொள்ள மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளை (லூக்கா 15:1-7, மத்தேயு 18:12-13) எடுத்து வாசியுங்கள்.
ஒரு பாவியைக் குறித்த சந்தோஷம்
நோய்களைக் குணப்படுத்தி இயேசு அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்திருந்த காலம். அப்போது அவரிடம் குணம்பெறவும் அவரது போதனைகளைக் கேட்கவும் உயர் அந்தஸ்தில் இருந்த வரி வசூலிப்பவர்கள், கடைநிலையில் இருந்த பாவிகள் ஆகிய அனைவரும் இயேசு செல்லுமிடமெல்லாம் அவரருகில் வந்துகொண்டே இருந்தார்கள். அதனால் பரிசேயர்களும் வேத அறிஞர்களும், “இந்த மனுஷன் பாவிகளை வரவேற்கிறான், அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறான்” என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள். அச்சமயம் அவர் இந்த உவமையைக் கூறினார்.
“உங்களில் எந்த மனிதனாவது தன்னுடைய நூறு செம்மறியாடுகளில் ஒன்று காணாமல் போனால், மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, வழிதவறிப்போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடிக்காமல் இருப்பானா? அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, தன் தோள்களில் அதைப் போட்டுக்கொண்டு சந்தோஷப் படுவான்.
பின்பு வீட்டுக்கு வந்து, தன் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, “காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன், என்னோடு சந்தோஷப்படுங்கள்” என்பான். அதேபோல், மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து உண்டாகிற சந்தோஷத்தைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியைக் குறித்துப் பரலோகத்தில் உண்டாகிற சந்தோஷம் அதிகமாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” என்றார்.
தொலைந்த காசு
மேலும் அவர் அடுத்த உவமையைக் கூறும்போது “பத்து வெள்ளிக் காசுகளை வைத்திருக்கும் எந்தப் பெண்ணாவது அதில் ஒரு காசைத் தொலைத்துவிட்டால் விளக்கைக் கொளுத்தி, தன்னுடைய வீட்டைப் பெருக்கி, அதைக் கவனமாகத் தேடிக் கண்டுபிடிக்காமல் இருப்பாளா? அதைக் கண்டு பிடித்ததும் தன்னுடைய தோழிகளையும் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களையும் அழைத்து, “என்னோடு சந்தோஷப்படுங்கள், நான் தொலைத்துவிட்ட வெள்ளிக் காசைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்று உவகையுடன் கூறுவாள். அதேபோல், மனந்திரும்புகிற ஒரு பாவியின் பொருட்டு கடவுளுடைய தூதர்களிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
அவர் மூன்றாவதாகக் கூறிய கெட்டழிந்த மகன் கதையை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். அந்த மகன் பிரிந்து வாங்கிச் சென்ற தன் பங்குச் சொத்துகளையெல்லாம் அந்நிய தேசத்தில் வெட்கப்படும்படியாக ஊதாரித்தனமாக இழந்து பன்றியின் உணவும்கூட உண்ணக் கிடைக்காமல் மனம் திருந்தி தன் தந்தையைத் தேடி வந்தபோது, அவனது தந்தை தூரத்தில் காணாமல் போன மகன் திரும்ப வருவதைக் கண்டு ஓடோடிச் சென்று கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தி ஏற்றுக் கொண்டார்.
இயேசு கூறிய உவமைக் கதையில் வந்த அந்தத் தந்தை உங்களது பரலோகத் தந்தை. நீங்கள் கடவுளை விட்டு வெகுதூரம் காணாமல் போய் இருந்தாலும் நம்பிக்கையுடன் அவரிடத்தில் திரும்பி வாருங்கள் உங்களை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் உங்களின் கடவுள்.