Published : 09 Jul 2015 12:30 PM
Last Updated : 09 Jul 2015 12:30 PM

தேவாரம் பாடாத கோயில்

காவிரியின் வடகரையிலும், தென்கரையிலும் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களை அதிகமான எண்ணிக்கையில் காணமுடியும். தேவாரப் பாடல்கள் கிடைக்கப்பெறாத பல சிவன் கோயில்களும் உள்ளன. அவ்வாறான ஒரு கோயிலே கரவந்தீஸ்வரசுவாமி கோயில்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள உடையார்கோயில் என்னும் சிற்றூரில் கரவந்தீஸ்வரசுவாமி கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் 18 கிலோமீட்டர் தொலைவில் அம்மாப்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் உள்ள இக்கோயில் இரு வகைகளில் சிறப்பு பெறும் கோயிலாகும். ஒரு காலத்தில் ஏரியின் நடுவில் இருந்த சிறப்பையும், சோழர் காலத்தில் கோயில்கள் கட்ட கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதற்கான விடையையும் கொண்ட சிறப்பையும் கொண்டது இக்கோயில்.

தற்போது குளமாகிவிட்ட பேரேரி

இக்கோயில் முன்னர் திரிபுவனமாதேவிப் பேரேரியின் நடுவில் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. அக்கல்வெட்டைப் பற்றி கரந்தைச் செப்பேடு மிகச் சிறப்பாகக் கூறுகிறது. இக்கோயில் முன்பு ஏரியின் நடுவில் தீவு போன்ற அமைப்பில் இருந்துள்ளது. திருக்கிளாஉடையார் மகாதேவர் கோயில் எனப்படும் இக்கோயிலின் ஒரு புறம் தூர்க்கப்பட்டு அக்கோயிலுக்குச் செல்வதற்கான வழித்தடத்தினை அமைத்துள்ளனர். நாளடைவில் ஏரி சுருங்கி, குளமாக ஆகிவிட்டது. இக்குளம், கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன்பாகக் காணப்படுகிறது.

கற்கள் வந்தது எப்படி?

பாறைகள், மலைகள் இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கற்றளிகளை உருவாக்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த நொடியூர்ப்பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததற்கான சான்று இக்கோயிலில் உள்ளதாக வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் என்ற நூலில் கூறுகிறார்.

“தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார் கோயில் சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18ஆம் ஆட்சியாண்டு, கி.பி.1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலை கொண்டு வந்து... என்ற கல்வெட்டுக்குறிப்பால் அறியலாம். நொடியூர் எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்னாண்டார் கோயில் பகுதியில் உள்ளதாகும். அனைத்தையும் நோக்கும்போது தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் நொடியூர்ப்பட்டணத்துக் கிள்ளியூர் மலைப்பகுதியிலிருந்து கற்கள் வந்திருக்கலாம் எனக் கொள்ளமுடிகிறது” என்கிறார் அவர்.

ஆட்கொண்டாரும் உய்யக்கொண்டாரும்

இத்தகு பெருமை பெற்ற இக்கோயிலின் வாயில் முகப்பைக் கடந்து உள்ளே பலிபீடமும், நந்தியும் உள்ளன. தொடர்ந்து ராஜகோபுரம். அதற்கடுத்து உள்ள முன் மண்டபத்தை அடுத்து கருவறை அமைந்துள்ளது. அங்குள்ள இறைவன் கரவந்தீஸ்வரர் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறையில் வலது புறம் ஆட்கொண்டாரும், இடது புறம் உய்யக்கொண்டாரும் உள்ளனர்.

கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தைச் சுற்றி வரும்போது வரிசையாக முக்குருணி அரிசி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், பூலோகநாதர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். இப்பிராகாரத்தில் பிரதான விநாயகர் சன்னதி தனியாக உள்ளது.

அச்சன்னதியில் அனுராதா க்ரமன சரஸ்வதி உள்ளார். கருவறையின் பின்புறம் முறையே விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் தலவிருட்சமான களாச்செடி பிரகாரத்தில் காணப்படுகிறது.

முன்மண்டபச் சிற்பங்கள்

பிராகாரத்தைச் சுற்றி உள்ளே வரும்போது அங்கே உள்ள முன்மண்டபத்தில் பள்ளியறை உள்ளது. அதனைத் தொடரந்து பைரவர், திருமறைக்கோயில், சேக்கிழார், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், அனுமார், சூரியன், சந்திரனைக் காண முடியும்.

இம்மண்டபத்தில் நவக்கிரகச் சன்னதி உள்ளது. கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அங்குள்ள இறைவி தர்மவல்லி என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதி அருகே நர்த்தன விநாயகர் உள்ளார்.

அண்மையில் திருப்பணி நிறைவுற்ற இக்கோயில், வரலாற்றின் சுவடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையுடையதாகும். ஆயிரமாண்டு கால வரலாற்றைத் தன்னுள் கொண்டிருக்கும் இக்கோயிலின் இறைவன் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார், ஏரி, குளமாகச் சுருங்கிய நிலையிலும்.FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x