“பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் விற்பனையில் வரலாற்று சாதனை” - தேவஸ்தானம் தகவல்

“பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் விற்பனையில் வரலாற்று சாதனை” - தேவஸ்தானம் தகவல்
Updated on
2 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சென்ற ஆண்டுகளை விட, ஐயப்பன் சீசனை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 64 ஆயிரத்து 420 பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகி ‘வரலாற்று சாதனை’ படைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பதிக்கு லட்டு என்பது போல பழநி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மலை வாழை, தேன், நெய், பேரீச்சம் பழம், நாட்டு சார்க்கரை, ஏலக்காய், கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.

இதில், சிறிதளவுக்கூட தண்ணீர் சேர்ப்பதில்லை.கெட்டு போகாமல் இருக்க செயற்கையாக எந்த வேதிப் பொருட்களும் இதில் கலக்கப்படுவதில்லை. மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதல்படி தயாரிக்கப்படுகிறது. அதனால்,கடந்த 2019-ல் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

பஞ்சாமிர்தத்துக்கு ‘புவிசார் குறியீடு’: தமிழகத்தில் உள்ள கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே.

பழநி தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 470 கிராம் டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும், 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, மலைக்கோயில், கிரிவலப்பாதை உள்பட 15 இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். சபரிமலை ஐயப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் தினமும் ஒரு லட்சம் பஞ்சாமிர்தம் டப்பா வரை விற்பனையாகும்.

தற்போது சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு எந்நேரமும் பஞ்சாமிர்தம் கிடைக்கும் வகையில் தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது.

2 நாட்களில் 4.64 லட்சம் டப்பா: சென்ற 2023 டிச.27-ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் நாளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 283 டப்பாக்கள் விற்பனை செய்யப்பட்டு, வரலாற்று சாதனை படைத்தது.

கடந்த ஆண்டுகளை விட, நடப்பாண்டில் (2025) சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு, சென்ற நவ.19-ம் தேதி 1 லட்சத்து 98 ஆயிரத்து 480 பஞ்சாமிர்தம் டப்பாக்கள், நவ.20-ம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 940 பஞ்சாமிர்தம் டப்பாக்கள் எனச் சென்ற 2 நாட்களில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 420 பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகி ‘வரலாற்று சாதனை’ படைத்துள்ளது.

இதன் மூலம் ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் நலன் கருதி லாப நோக்கமின்றி உற்பத்தி விலைக்கே பஞ்சாமிர்தம் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் விற்பனையில் வரலாற்று சாதனை” - தேவஸ்தானம் தகவல்
நெல் ஈரப்பதம், விவசாயிகள் நிவாரணம் விவகாரம்: திமுக கூட்டணிக் கட்சிகள் தஞ்சை, திருவாரூரில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in