

இறைவனடி சேர்ந்தவர்களின் படங்களை தெய்வத் திருவுருவப் படங்களுடன் சேர்த்து வைக்கலாமா இறைவனுக்குச் சாற்றிய மாலைகளை அவர்களுக்கு சாற்றி வழிபடலாமா?
இறைவனடி சேர்ந்தவர்களை இறைவன் திருவுருவப் படங்களோடு சேர்த்து வழிபடக் கூடாது. தனியாக வைத்து வழிபடலாம். பிதுர்கள் எனப்படுபவர் இறைவனடி சேர்ந்தவர்களே தவிர இறைவனாகக் கருதப்பட மாட்டார்கள். தெய்வ நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலை பிதுர் நிலை.
பிதுர்களுக்கு உரிய திதிகளை உரிய முறையில் ஒரு குடும்பம் அளிக்கும் பட்சத்தில், அந்தக் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பிதுர்கள் அவர்களுக்குக் காவலாக இருப்பர் என்பது ஐதீகம். இதையொட்டிதான் அமாவாசை, திவசம் போன்ற சந்தர்ப்பங்களில் நம் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களை நினைத்துப் பூஜிக்கும் வழக்கம் வந்தது.
இறைவனுக்கு ஒருமுறை சாற்றிய மாலையை இன்னொரு முறை இறைவனுக்கே பயன்படுத்தக் கூடாது என்கின்றர் பூஜை நியமங்களில் சிறந்தோர். இப்படி இருக்கையில் இறைவனுக்குச் சாற்றிய மாலையை இறைவனடி சேர்ந்த நமது முன்னோர்களின் படங்களுக்கு போடக் கூடாது.
இறைவனுக்கு ஒரு முறை சூடப் பட்ட மாலைக்குப் பெயர் நிர்மால்யம். அதன் பின் அந்த மாலையை இன்னொரு தெய்வத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் பூஜை நியமம்.