

ஒருவர் ஒரு காலிமனையை வாங்கினார். அதில் வீடு கட்டினார். அவரது நிதிநிலையை அனுசரித்து, இயன்ற அளவுக்கு வசதிகளைச் செய்தார். மனை மண்ணால் ஆனது. அதில் வீடு கட்டுவதற்கு அவர் பயன்படுத்திய பொருட்களும் மண்ணிலிருந்து வந்தவைதாம். அவர் தன் ஆயுள் முழுவதும் குடியிருந்தார். அவருக்குப் பின்னர் அவர் மகன் அதை இன்னொருவருக்கு விற்றுவிட்டான். வாங்கியவர் அந்த வீட்டைப் புதுப்பித்தார்.
இப்படிப் பல தலைமுறைகள் சென்றன. அந்த மனையானது வீடாகவும் கடைகளாகவும் மாறியதுன. ஒரு கட்டத்தில் அந்தக் கட்டிடம் உருக்குலைந்து பாழிடமானது. இவ்வளவுக்கும் அடிப்படையான மண் மட்டும் அந்த இடத்தில் தரையாக, குழியாக, மேடாக, பள்ளமாக நிலைத்திருந்தது.
யுகயுகங்களுக்குப் பின்னர், பூமியே அழிந்து மண்ணும் தரையும் மறைந்து எல்லையற்றப் பெருவெளியில் எல்லாம் கலந்து இருந்த இடம் தெரியாமல் போகலாம்.
காலம், இடம் முதலான எந்த அளவுகோலும் அற்ற ஒரு சூனியத்திலிருந்து வெடித்து உருவான இந்தப் பூமி, மீண்டும் அந்தச் சூன்யத்திலேயே ஒடுங்கிவிடும் என்றுதானே விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
சூன்யத்திலிருந்து உலகம் யாவையும் தாம் உளதாக்கி, நிலைபெறுத்தலும், நீக்கலும்; நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்- அவர் தலைவர்; அன்னவர்க்கே சரணம் என்கிறார் கம்பர். உடையார் என்னும் கடவுளிடமிருந்து கிளைத்து வந்த எல்லாமே உரிய நேரத்தில் உருவழிந்து அந்த உடையாரோடு ஐக்கியமாகிவிடும் என்பதுதானே மெய்ஞானிகள் கண்டறிந்து நமக்கு உணர்த்திய சத்தியம்?
பொருளை உணர்த்தும் ரமணர்
இருபதாம் நூற்றாண்டில் நம் கண்முன்னர் வாழ்ந்த அவதார புருஷரான ரமண மாமுனிவர் இந்தக் கருத்திதை அவர் இயற்றிய ‘உள்ளது நாற்பது’ என்ற நூலில் உபதேசிக்கிறார். உள்ள பொருளை நாற்பது வெண்பாக்களால் உணர்த்துவதால் அந்நூல் அப்பெயர் பெற்றது. மூலநூல நாற்பது பாடல் அனுபந்தமாக நாற்பது பாடல்களும் ரமணரால் அருளப்பட்டுள்ளன. அனுபந்தத்தை முதலில் வாசித்து, அதன் பின் மூலநூலை வாசிக்க எளிதாயிருக்கும் என்பது அடியார்களின் கருத்து.
அனுபந்தத்தின் முதல் பாடலில்
எதன்கண்ணே நிலையாகி இருந்திடும்
இவ்வுலகம் எலாம், எதனது எல்லாம்
எதனின்று இவ்வனைத்து உலகும் எழுமோ
மற்றுஇவை யாவும் எதன் பொருட்டாம்
எதனால் இவ்வையம் எலாம் எழுந்திடும்
இவ்வெல்லாமும் எதுவே ஆகும்
அதுதானே உளபொருளாம், சத்தியமாம்
அச்சொரூபம் அகத்தில் வைப்பாம்
என்று விளக்குகிறார் ரமணர்.
இந்த உலகம் எதில் நிலைத்து நிற்கிறது; இது யாருடையது; இது எதிலிருந்து உண்டானது; இது யார் பொருட்டு இயங்குகிறது; எதனால் உண்டானது; எதுவாக மாறப்போகிறது; இதையெல்லாம் சிந்தித்தால் அந்த ‘எது’ தான் ஆதி அந்தமின்றி என்றைக்கும் உள்ளது, அதுவே சத்தியம், அந்தப் பரம்பொருளை நம் நெஞ்சில் நிறுத்துவோம் என்று ரமண பகவான் உபதேசிக்கிறார்.
நிலைத்து நிற்கும் இறை சக்தியிலிருந்து மண் தோன்றி, புவி தோன்றி, உயிர்களும் தோன்றி, ஆடியோடி, அந்த இறைமையின் தன்வயத்துக்கு ஆளாகிவிடுகின்றன. இந்தச் சத்தியத்தை உணர்ந்து உள்வாங்கி, இறைமையின் சொரூபத்தை நம் நெஞ்சில் நிலைபெறச் செய்வோம் என்கிறார் ரமண மகரிஷி.