

ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தங்கால மலையில் அமைந்துள்ளது. 240 படிகளை கொண்ட திருவண்ணாமலையின் மீது நின்ற கோலத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி பெருமாள் திருவண்ணாமலையில் தங்கி விட்டதாக ஐதீகம்.
திருப்பதி செல்ல இயலாதவர்கள் திருவண்ணாமலை வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் 5 சனிக்கிழமைகளில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறும். இன்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஶ்ரீநிவாச பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த ஶ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 4 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.