மலைபோலே வரும் சோதனை யாவும்...

மலைபோலே வரும் சோதனை யாவும்...
Updated on
2 min read

இருட்டிவிட்டது. இனி பயணம் மேற்கொள்ள முடியாது என்ற நிலை. மலைப்பாங்கான பகுதியில் ஒரு குகை தென்படவே, அதில் தங்கி இரவைக் கழிக்க அந்த மூன்று வழிப்போக்கரும் முடிவெடுத்தனர்.

குகைக்குள் நுழைந்து சில நிமிடங்கள்கூட ஆகியிருக்காது. அதற்குள் மலைப்பாறை ஒன்று உருண்டு வந்து குகையின் வாயிலை மூடிவிட்டது. தள்ளித்தள்ளிப் பார்த்தனர். அவர்களின் கைகள்தான் வலித்தன. பாறை அசைவதாக இல்லை.

இனி தப்ப முடியாது! உயிருடன் சமாதிதான். மரண பயம் அந்த வழிப்போக்கரைப் பிடித்துக் கொண்டது.

ஒருவர் சொன்னார். “நண்பர்களே! வாழ்வும், மரணமும் இறைவன் கையில்தான் உள்ளது. அதனால், அழுது, புலம்பிப் பயனில்லை. நாம் வாழ்க்கையில் எத்தனையோ தவறுகள் இழைத்திருந்தாலும், ஏதாவது ஒரு நற்செயலை நிச்சயம் செய்திருப்போம். அதை முன் வைத்து இறைவனிடம் மன்றாடுவோம். அவன் நம் கோரிக்கையை ஏற்று நிச்சயம் நமக்கு உதவுவான்!” என்றார்.

இந்த யோசனையைக் கேட்டதும் மற்ற இருவருக்கும் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி படர்ந்தது. ஒவ்வொருவரும் தத்தமது நற்செயல்களை முன்வைத்து இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கினர்.

முதலாமவர் சொன்னார். “நான் ஒருமுறை கால்நடைகளை மேய்த்துக் கொண்டே காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டேன். இருள் சூழ்ந்துவிட்டது. வீட்டில் வயதான என் பெற்றோரும், மனைவி, மக்களும் பசியுடன் இருப்பார்கள். நான் சென்றுதான் அவர்களுக்குப் பால் கறந்து தர வேண்டும். அதுதான் எங்களது அன்றாட உணவும்கூட. இந்த உணர்வுடனேயே அவசரஅவசரமாக வீடு திரும்பியும் இரவாகிவிட்டது.

என் பெற்றோர் களைப்பு மிகுதியால் உறங்கிவிட்டார்கள். குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை என் மனைவி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சி என் மனதைப் பிழிய அவசர அவசரமாகப் பால் கறந்து பெற்றோரிடம் எடுத்துச் சென்றால் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களுக்குக் கொடுத்துவிட்டுதான் வீட்டாருக்குத் தருவது வழக்கம். இந்நிலையில், நேரம் ஓடிக் கொண்டிருந்தது. பசியால் பிள்ளைகள் அழுது கொண்டிருந்தார்கள்.

என் மனமோ துடியாய்த் துடித்தது. நல்லவேளை! அழும் குரல் கேட்டு என் பெற்றோர் விழித்துக் கொள்ளவே அவர்கள் அருந்த பால் கொடுத்துவிட்டு அடுத்ததாக மனைவி, மக்கள் அருந்த பால் கொடுத்தேன். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்ற உன் கட்டளைகளைப் பின்பற்றியே இதைச் செய்தேன். இறைவா! இந்த நற்செயலை ஏற்றுக்கொண்டு இந்தத் துன்பத்திலிருந்து எங்களைக் காப்பாயாக!”

இறையருளால் பாறை லேசாக அசைந்தது. வானம் தென்பட்டது.

இரண்டாவது வழிப்போக்கர் இப்படிச் சொல்லலானார். “ஒருமுறை எனது கூலியாட்களில் ஒருவர் கூலி வாங்க மறந்துவிட்டார். அவரைப் பல நாள் தேடியும் கிடைக்காததால், அந்தப் பணத்தை எனது வணிகத்தில் முதலீடு செய்தேன். இறைவனின் அருளால் அந்தச் சிறிய தொகை காடு, கழனி, தோட்டம், துறவு, கால்நடைகள் என்று பன்மடங்காய்ப் பெருகியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்த அந்தக் கூலியாள் தனது கூலியைக் கேட்டார். நான் அவரிடம், வயல்வெளிகள், தோட்டம், கால்நடைகள் எல்லாம் அவருடையதுதான் என்று சொல்லி ஒப்படைத்தேன். இறைவா! அடைக்கலப் பொருளை அதற்குரியவரிடம் ஒப்படைத்தது உனது திருப்பொருத்தத்தை நாடித்தான் செய்தேன்! எனவே, இந்தச் சிறிய செயலை ஏற்று இந்தப் பேராபத்திலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.

இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றதற்கு அடையாளமாகப் பாறையில் அசைவு ஏற்பட்டு அது சற்றே விலகியது. வெளியிலிருந்து சில்லென்று காற்று வீச ஆரம்பித்தது.

மூன்றாவது வழிப்போக்கர் கலங்கிய கண்களுடன் சொல்ல ஆரம்பித்தார்: “எனது உறவுக்காரப் பெண்ணொருத்தி மிகவும் அழகாக இருப்பாள். அவள் மீது எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை. ஒருநாள் தனிமையில் எனது விருப்பத்தை அவளிடம் தெரிவித்தேன். ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்டு அதைக் கொடுத்தால் எனது ஆசைக்கு இணங்குவதாக அவள் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டாள்.

நான் பல்லாண்டு கடினமாக உழைத்து சேர்த்து வைத்திருந்த சேமிப்பை அல்லவா அவள் கேட்டது! ஆசை கண்களை மறைக்க அவள் கேட்ட தொகையை எடுத்துச் சென்று அவளிடம் கொடுத்தேன். அவள் மென்மையுடன், அதேநேரத்தில் உறுதியான குரலில், “விபச்சாரம் இறைவனால் தடுக்கப்பட்ட பெரும் பாவம்! இறைவரம்புகளை மன இச்சைகளை முன்வைத்து மீறுவது அநீதியல்லவா?” – என்றாள்.

சுயநினைவுக்கு வந்த நான் அந்தப் பெண்ணிடம் எனது தவறுக்கு மன்னிப்பு கேட்டேன். பணத்தையும், எனது வெகுமதியாக அவளுக்குக் கொடுத்துவிட்டேன். என்னையும், பாவச் செயலிலிருந்து காத்துக் கொண்டேன். இறைவா! உன் கட்டளைப்படியே என் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். எங்கள் மீது இரக்கம் கொண்டு அருள்வாய்!”

பெருத்த ஓசையுடன் பாறை உருண்டோடியது. இறைவனைப் புகழ்ந்தவாறே குகைக்குள்ளிருந்த மூன்று வழிப்போக்கரும் வெளியில் வந்தார்கள்.

நற்செயல்கள் இறையன்பைப் பெற்றுத் தரும். நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்று நபிகளார் தமது தோழர்களுக்குச் சொன்ன முன்சென்ற சமுதாயத்தாரின் வரலாற்றுச் சம்பவம் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in