

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற 27 கருட சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே எழுந்தருளிய 27 பெருமாள் சுவாமிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரில் உள்ள 27 வைணவ கோயில்களின் கருட சேவை நேற்று ஒரே இடத்தில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தஞ்சாவூரில் 27 பெருமாள் கோயில்களின் உற்சவ பெருமாள் சுவாமிகள், கருட வாகனத்தில் புறப்பட்டு, ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதன்படி, நிகழாண்டு கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள், மணிகுன்றா பெருமாள், மேல சிங்கப்பெருமாள், வேளூர் வரதராஜர், கல்யாண வெங்கடேச பெருமாள், கலியுக வெங்கடேச பெருமாள், வரதராஜ பெருமாள், நவநீதகிருஷ்ணன், மேலவாசல் ரங்கநாதர், விஜய ராமர், கோவிந்தராஜ பெருமாள், ஜனார்த்தன பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கீழ கோதண்டராமர், கீழ சிங்கப் பெருமாள், பூலோக கிருஷ்ணர், படித்துறை வெங்கடேசப் பெருமாள், பஜார் ராமர் ஆகிய 27 கோயில்களில் இருந்து கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் புறப்பட்டு, கீழவாசல் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, கொண்டிராஜபாளையம் வழியாகச் சென்றுகீழ ராஜவீதியில் வரிசையாக எழுந்தருளினர். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் சுவாமிகளை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து வீதியுலா சென்று, மீண்டும் அந்தந்த கோயில்களை சுவாமிகள் சென்றடைந்தனர். இன்று நவநீத சேவை நிகழ்ச்சியும், விடையாற்றி விழாவும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் ராமானுஜ தர்சன சபா மற்றும் அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.