

மங்கள்யான் விண்கல வெற்றியை அளித்த இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் என மியூசிக் அகாடமியில் நடைபெற்ற 88 ம் ஆண்டு ஆலோசனைக் கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் தொடக்க விழாவில் மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபொழுது, இசையின் நுணுக்கங்களை விளக்கினார். அவரது ஆழ்ந்த இசை ஞானம் அவர் விளம்ப காலம் குறித்து விளக்கியது ரசிகர்களின் ஏகோபித்த கர கோஷத்தைப் பெற்றது.
கர்நாடக இசைப் பாடகி சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன், வித்வான் டி.வி. கோபாலகிருஷ்ணன், சங்கீத கலாநிதி உமையாள்புரம் கே.சிவராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழா சென்னை மியூசிக் அகாடமி வளாகத்தில் உள்ள டி.டி.கிருஷ்ணமாச்சாரி அரங்கத்தில் திங்களன்று (டிசம்பர் 15) நாதஸ்வர இசையுடன் தொடங்கியது. குளித்தலை ஆர். அன்பழகன், பண்டமங்கலம் ஜி. யுவராஜ் ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்க விராலிமலை ஜெ.கார்த்திக், குமாரவயலூர் ஆர். நல்லு குமார் ஆகியோர் தவிலில் பக்க பலம் சேர்த்தனர்.
விழாவினைத் தொடர்ந்து முதிர் மாலை நிகழ்ச்சியாக வாய்ப்பாட்டுக் கலைஞர் சங்கீத கலாநிதி திருச்சூர் வி.ராமச்சந்திரன் பாட, சங்கீத கலாநிதி எம். சந்திரசேகரன் வயலின் இசைத்தார். பக்க வாத்தியமாக மன்னார்குடி ஏ. ஈஸ்வரன் மிருதங்கம், ஈ.எம். சுப்ரமண்யம் கடம் வாசித்தனர்.
மியூசிக் அகாடமியில் இசை விழா களைகட்டிவிட்டது.