

பொதிகைமலை அடிவாரத்தில் பெருமாள் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் நடத்திய திருத்தலம் இருக்கிறது.
இந்திரத்துய்மன் என்னும் மன்னன் ஒருசமயம் அகத்தியரின் சாபத்தால் யானையாகச் சபிக்கப்பட்டான். அந்த யானை கஜேந்திரன் எனப் பெயர் பெற்று, யானைக் கூட்டத்துக்கு தலைமையேற்றது. ஒருமுறை கஜேந்திர யானை பொதிகை மலை சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சூரியனை வணங்கியது. பிறகு, அங்கிருந்து திருக்குற்றாலம் சென்று சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி திருக்குற்றாலநாதரை வணங்கியது. அங்கிருந்து மகா விஷ்ணுவை வழிபடுவதற்காக அத்தாளநல்லூர் வந்தது.
ஆதிமூலத்தை அழைத்த யானை
அத்தாளநல்லூரில் தாமரைத் தடாகத்தில் நீராடிய கஜேந்திரன், அங்கிருந்த தாமரைப் பூக்களைப் பறித்து திருமாலுக்குச் சூட எண்ணியது. அதற்காகப் பூக்களைப் பறித்தபோது, முன்பு நாரதரின் சாபத்தால் முதலையாகச் சபிக்கப்பட்ட ஊர்த்துவன் எனும் கந்தர்வன் கஜேந்திரனின் கால்களைக் கவ்விக் கொண்டான். எப்படியெல்லாமோ முயன்றும் முதலையின் பிடியிலிருந்து கஜேந்திரனால் தப்ப முடியவில்லை. உடனே, பறித்த தாமரை மலர்களை தன் துதிக்கையில் வைத்தபடி ஆதிமூலமே என்று அழைத்தது கஜேந்திரன்.
உடனே, கருட வாகனத்தில் அங்கே பிரசன்னமான மகாவிஷ்ணு, தனது சக்கராயுதத்தால் முதலையைக் கொன்றார். இதனால், கஜேந்திரனும் தப்பியது; ஊர்த்துவனும் சாப விமோசனம் பெற்றான். பெருமாள் யானைக்கு இறங்கிய தலம் என்பதால், இது ‘ஆனைக்கு அருளிய தலம்’ என்றும் ‘ஆனையைக் காத்த தலம்’ என்றும் பெயரானது. ‘அத்தி’ என்றால் ‘யானை’ என்றும் பொருள். யானையை ஆட்கொண்டதால் இவ்வூர் அத்தாளநல்லூர் என்றும் இத்தலத்துப் பெருமான் ‘ஆனை காத்தருளிய பிரான்’ என்றும் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன.
கங்கைக்கு நிகரான தீர்த்தம்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது அத்தாளநல்லூர் அருள்மிகு கஜேந்திரவரத பெருமாள் கோயில். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளதால் இத்திருத்தலம் பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலின் மேற்கே தாமிரபரணி தெற்கு வடக்காக பாய்வதால் இந்தத் தீர்த்தம் கங்கைக்கு நிகரானது.
பெருமாள் இங்கே நின்ற கோலத்தில் காட்சி தருவதால் இங்கு வந்து வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டதற்கான பலாபலன்களை அடையலாம் என்பது நம்பிக்கை. கோயிலின் பின்பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த நம்பிக்கை இப்போதும் தொடர்வதால் அந்தத் தூணே நரசிம்மராகக் கருதி வழிபடப்படுகிறது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும் தைப்பூசமும் இங்கே திருவிழா நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன.