

சிவனுடன் சேர்ந்து குரு பகவானும் உற்சவ மூர்த்தியாய் வலம்வரும் ஒரே திருத்தலம் திட்டை. குருப்பெயர்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளின்போது லட்சக் கணக்கானவர்கள் திட்டை குரு பகவானைத் தரிசிக்க வருகிறார்கள்.
சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகரிஷியின் புதல்வர் தான் குரு. இவரே தேவர்களுக்கும் குருவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்பவர். அந்த வகையில் தமிழகத்தின் குரு பரிகாரத் தலங்களில் முக்கியத் தலமாக விளங்குகிறது திருத்தென்குடி திட்டை.
தஞ்சையிலிருந்து திருக்கருக்காவூர் செல்லும் சாலையில் பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது திருத்தென்குடிதிட்டை என்ற திட்டை. இந்தச் சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்றும் பொருள்கள் உண்டு. பிரளய காலத்தில் இப்பூவுலகம் நீரால் சூழப்பட்டது. அப்போது மாயை வயப்பட்ட மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் பெருவெள்ளத்தையும் எங்கும் சூழ்ந்திருந்த இருளையும் பார்த்து வழி தெரியாது திகைத்து நின்றனர்.
அப்போது, பூலோகத்தில் மேடான ஒரு திட்டுப் பகுதி அவர்களின் கண்ணில் பட்டது. மும்மூர்த்திகள் அந்தத் திட்டில் ஏறி நின்று இறைவனையும் இறைவியையும் துதித்தனர். அப்போது, ‘ஓம்’ எனும் மந்திரவொலி மும்மூர்த்திகளின் காதில் ஒலிக்க, ஜோதி வடிவமாய் சிவபெருமான் காட்சி கொடுத்தார். அவரை வழிபட்டு நின்ற மும்மூர்த்திகள், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வரங்களையும் அப்போது சிவபெருமானிடமிருந்து பெற்றனர். அப்படி வரம் கிடைத்த இடம்தான் திருத்தென்குடிதிட்டை என பிற்காலத்தில் பெயர் விளங்கியது.
சுயம்பு மூர்த்தி சிவன்
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். வசிஷ்டேஸ்வரரும் லோகநாயகி அம்மனும் பிரதான தெய்வங்களாக இருந்தாலும் இவர்களுக்கு இடையில் தனியாக சந்நிதி கொண்டிருக்கும் குரு பகவான் விசேஷ மூர்த்தியாகப் போற்றப்படுகிறார்.
இத்திருத்தலத்தின் மூலவர் விமானத்தில் சந்திர மற்றும் சூரிய காந்தக் கற்கள் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. சந்திர காந்தக் கல்லானது இரவில் சந்திரனின் குளுமையை ஈர்த்துத் தன்னுள் வைத்து நீராக்கி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒரு சொட்டு நீரை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதாக நம்பப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் லோகநாயகி அம்பாளையும் வசிஷ்டேஸ்வரையும் அவருக்கு எதிரே இருக்கும் நந்தியாண்டவரையும் ஒரே இடத்தில் நின்று ஒரே சமயத்தில் வழிபடும் வகையில் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முல்லை மலர் அர்ச்சனையும் கடலை நிவேதனமும்
வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து இங்குள்ள குரு பகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்துக் கொண்டைக் கடலை நிவேதனம் செய்து வழிபடலாம். வசதி படைத்தவர்கள், இங்கே நவகிரஹ ஹோமம் , குருப்பரீதி காயத்திரி ஹோமம் செய்து குருபகவானை வழிபடலாம். குருப்பெயர்ச்சியின் போது இங்கு நடைபெறும் லட்சார்ச்சனையில் பெங்கெடுத்தும் பரிகாரம் செய்யலாம்.