

மேலவீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்
போர்க்களம் சென்று போராடி தனக்காக எதிரியை வீழ்த்திய பெருமாளுக்காக நெகிழ்ந்து நெல்லை மன்னன் கட்டிய திருக்கோயில் இது.
சந்திரவம்ச அரசன் கிருஷ்ணவர்மா, திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் ஆழ்ந்த தெய்வபக்தி கொண்டவன். கிருஷ்ணவர்மா அல்லும் பகலும் தெய்வ வழிபாடுகளிலும், ஆலயப் பணிகளிலும் மூழ்கிக் கிடந்தான். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அண்டை நாட்டு மன்னன் நால்வகைப் படைகளைத் திரட்டி நெல்லைச் சீமை மீது போர்தொடுத்து வந்தான். காரியம் கைமீறிப் போய்விட்டதை உணர்ந்த கிருஷ்ணவர்மா, அண்டை தேசத்து மன்னனுடன் தன்னால் போரிட்டு வெல்ல முடியாது என முடிவுக்கு வருகிறான்.
செய்வதறியாது நின்ற மன்னன், தினமும் வணங்கும் வரதராஜப் பெருமாளிடம் போய் நின்றான். அங்கே, மும்மைசேர் உலகுக்கெல்லாம் மூலமந்திரமாய் விளங்கும் ராமநாமத்தை இடையாறாது உச்சரித்தான். கிருஷ்ணவர்மாவின் வேண்டுதலுக்கு இறங்கி வந்தார் வரதராஜப் பெருமாள். கிருஷ்ணவர்மாவை அமைதிகொள்ளச் செய்துவிட்டு, அவரது உருவத்தில் அண்டை நாட்டு மன்னனை எதிர்கொள்ளப் புறப்பட்டார்.
அண்டை நாட்டு மன்னனை இமைப்பொழுதில் வீழ்த்திய வரதராஜப் பெருமாள், போர்க்களத்திலிருந்து அரண்மனைக்கு வந்து அங்கே, அருளைப் பொழியும் வீரராகவப் பெருமாளாக கிருஷ்ணவர்மாவுக்குக் காட்சி கொடுத்தார். மெய்சிலிர்த்து அகமகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே அச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளி தன்னையும் தனது குடிமக்களையும் காக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினான். வேண்டுதலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார் பெருமாள்.
பெருமாளுக்காக உருவான வீரராகவபுரம்
இதைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடிய கிருஷ்ணவர்மா, தாமிரபரணி ஆற்றங்கரையில் வீரராகவபுரம் என்ற தீர்த்தக் கட்டத்தையும் வீரராகவபுரம் என்ற சிற்றூரையும் பெருமாளுக்காக உருவாக்கி அந்த ஊரின் நடுவே வரதராஜப் பெருமாளுக்குக் கோயில் எழுப்பி, பெருமாளை பிரதிஷ்டை செய்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகு கிருஷ்ணவர்மாவின் ஆளுகையில் நெல்லைச் சீமை செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், இறைவன் மீது சாரங்கா ராகத்தில் அமைந்த ‘வரதராஜம் உபாஸ் மஹே’ என்ற பாடலை இயற்றியுள்ளார். மன்னனின் குறை தீர்க்க, தானே அவதாரம் எடுத்துப் போர்க்களத்துக்குப் போன பெருமாளை நெக்குருக வேண்டி நின்றால் தீராத வினையும் தீரும்; தேடக் கிடைக்காத செல்வமும் சேரும் என்பது நம்பிக்கை.