

திருவண்ணாமலை உச்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் ஜோதியாகக் காட்சி கொடுத் தார் அண்ணாமலையார்.
‘நினைத்தாலே முக்தி தரும்’ என்று போற்றப்படும் அக்னி தலமான திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை என்று தொடர்ந்து 9 நாட்களுக்கு வெள்ளி ரதம் உட்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வலம் வந்தனர்.
மலர் அலங்காரம்
திருவிழாவின் முக்கிய நிகழ் வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் கண்கொள்ளா காட்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதற்காக, அதிகாலையில் 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை செய்யப் பட்டது. பின்னர் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனை செய்யப்பட்டு, பட்டாடைகள் உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டனர்.
வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையார் கருவறையில் கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. அதிலிருந்து ஒரு மடக்கில் நெய் திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது. பின்னர், நந்தி தேவர் முன்னிலையில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் 5 விளக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முதல் பிரகாரத்தில் வலம் வந்து பரணி தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர், பஞ்ச சக்திகளை குறிக்கின்ற வகையில் அம்மன் சன்னதியில் 5 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதையடுத்து விநாயகர், முருகர் உள்பட அனைத்து சன்னதிகளிலும் விளக்கு ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாலையில், தங்க கொடி மரம் முன்பு பஞ்ச
மூர்த்திகள் எழுந்தருளி, பக்தர் களுக்கு காட்சிகொடுத்து தீப தரிசன மண்டபத்தில் அமர்ந்தனர். அப்போது, ‘அர்த்தநாரீஸ்வரர்’ (கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தருவார்) நடன மாடியபடி தங்கக் கொடி மரம் முன்பு எழுந்தருளி காட்சி கொடுத்தார்.
ஏகன் - அநேகன் தத்துவம்
ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் (பரம் பொருளான ஈசனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பது பொருள்), கொடி மரம் எதிரே உள்ள அகண்டத்தில் பஞ்ச பூதங்களான 5 விளக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு அசைக்க, அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணுலகம் வரை எதிரொலிக்க, ‘மலையே மகேசன்’ என்று வணங்கப்படும் திரு அண்ணாமலை உச்சி யில் (2668 அடி) 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பருவத ராஜகுல வம்சத்தினர் தீபத்தை ஏற்றி னர். 11 நாட்களுக்கு மகா தீபம் காட்சிகொடுக்கும். மகா தீபத்தை வணங்கும்போது அனைத்து ஜீவராசிகளின் பாவம் தீரும்.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட தும், திருவண்ணாமலை நகரம் மற்றும் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விளக்குகள் போடப்பட்டு, வீடுகளில் அகல் தீபம் ஏற்றப்பட்டன.
20 லட்சம் பக்தர்கள்
மகா தீபத்தை காண 20 லட்சத் துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளதாக காவல்துறை கணக்கிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம். அதிகாலை யிலேயே பக்தர்கள், கிரிவலம் வரத் தொடங்கிவிட்டனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை தொடங்கி, திங்கள்கிழமை காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பக்தர்களைப் போன்று உண்ணா
முலை அம்மனுடன் அண்ணா மலையார் திங்கள்கிழமை (இன்று) கிரிவலம் வருகிறார். சிவ பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை மிதந்தது. இதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.