

கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, ஈஸ்டர், குருத்தோலை ஞாயிறு போன்றவை மற்ற மதத்தினருக்கும் தெரிந்த புனிதநாட்கள். ஆனால் ’அஸ் வென்னஸ் டே’ என்று அழைக்கப்படும் விபூதி புதன் கத்தோலிக்க மக்கள் கடைபிடிக்கும் முக்கியமான நாள். ஒரு விதத்தில் இதை சகோதரத்துவத்தின் நாள் என்றும் சொல்லாம். எல்லா மதங்களின் தத்துவத்திலும் இருக்கும் நிலையாமையை உணர்ந்து இறைவனில் இணைய அழைப்பதை விபூதி புதன் கிறிஸ்தவத்திலும் வலியுறுத்துகிறது.
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் என்பது இந்த விபூதி தினத்திலிருந்தே தொடங்குகிறது. இயேசு சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களைத் தவக்காலமாகப் பின்பற்றுகிறார்கள்.
தவக்காலம் என்பது கடந்தகாலத்தில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தவும், மீண்டும் தவறுகளைச் செய்யாமல் உறுதியெடுத்துக்கொள்ளவும், மனம் வருந்தி, ஒருத்தல் மூலமும், உண்ணா நோன்பு இருந்து நம்மை நாமே தூய மனிதர்களாகத் தயார் செய்துகொள்ளக் கடவுளால் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
விபூதி புதனன்று தேவாலயத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரின் நெற்றியிலும் “மகனே/மகளே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதை மறவாதே” என்று கூறி குருவானர் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.
ஆட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டு சிலுவை சாவுக்கு ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுக்கும் முன்பு, அதை அறிந்து, ஒரு மனிதனாக வேதனை கொள்ளும் இயேசு, நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்து, தனக்கு வரபோகும் பாடுகளை எதிர்கொள்ள மனத் திடம் தரும்படி தனது தந்தையை நோக்கி ஜெபித்ததை விவிலியம் எடுத்துக் கூறுகிறது.
கிறிஸ்துவின் இந்தத் துயர அனுபவத்தில் இணையும் நோக்கத்தொடும் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
தவக்காலம் என்பது தன் பிழைகளைக் கண்டறிந்து தனது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளும் அரிய தருணம். அப்படிப்பட்ட தவக்காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், மாமிச உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து ஒதுக்கி, அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை கிறிஸ்தவர்கள் வழக்கமாக கடைபிடித்து வருகிறார்கள்.