

நள்ளிரவு பூஜை என்றாலே பலருக்கும் ஒரு அச்சம் உள்ளது. நரபலி பூஜையோ, மந்திரவாதி பூஜையோ என்று நடுங்குவார்கள். ஆனால், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கோயிலில் நள்ளிரவில் நடக்கும் பூஜையில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்வது காலங்காலமாக நடைபெற்றுவருகிறது. வாரத்தில் திங்கள்கிழமை தோறும் நள்ளிரவில் மட்டும் நடை திறக்கப்படும் இக்கோயில், பரக்கலக்கோட்டை என்ற இடத்தில் உள்ளது. இங்கு மரமே இறைவானாகப் பொது ஆவுடையார் என்ற பெயரில் சிவபெருமான் வீற்றுள்ளார்.
இங்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடை திறக்க என்ன காரணம்? அதுவும் நள்ளிரவில் மட்டும் ஏன் திறக்கிறார்கள்? இங்கு மரமே இறைவனாகக் காட்சியளிக்க என்ன காரணம்? அதற்குக் கோயிலின் தலபுராணத்தில் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
இல்லறத்தில் இருந்து சிவனை வழிபட்டு வந்தார் வானுகோபர். அதேபோலத் துறவு கொண்டு சிவனை வணங்கி வந்தார் மகாகோபர். இவர்கள் இருவரும் இறைவனை அடைய இல்லறமே ஏற்றது என்றும், துறவறமே ஏற்றது என்றும் தங்களுக்குள் வாதிட்டு தில்லை அம்பலத்தில் நடனமாடும் இறைவனிடம் நீதி வேண்டினர்.
அப்போது அசரீரியாகத் தோன்றிய இறைவன், ‘’தெற்கே பொய்கை நல்லூரில் உறங்கும்புளி, உறங்காப்புளி என்ற இரண்டு புளிய மரங்கள் உள்ளன. அங்கே சென்று காத்திருங்கள்' என்று உத்தரவிட்டார். அதன்பிறகு கார்த்திகை சோமவாரம் என்று சொல்லப்படும் கார்த்திகை மாதத் திங்கட்கிழமை அன்று தில்லையில் பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்ட பிறகு, நள்ளிரவில் பொய்கை நல்லூரில் நடராஜ பெருமாள் ஆலமரம் ஒன்றின் அடியில் தோன்றித் துறவிகளின் வாதங்களை வழக்காடு மன்றம் நடத்திக் கேட்டாராம்.
‘’உள்ளத் தூய்மையோடு உண்மையான அன்போடு வழிபட்டால் இறைவனைத் துறவறத்தின் மூலமும் அடையலாம், இல்லறத்தின் மூலமும் அடையலாம்’’ என்று இருவரும் சமரசம் அடையும் வகையில், பொதுவான தீர்ப்பினை வழங்கிச் சென்றார். இருவருக்கும் மத்தியஸ்தம் செய்ததால் சம்ஸ்கிருதத்தில் மத்தியப்புரீஸ்வரர் என்றும் தமிழில் பொது ஆவுடையார் என்றும் இங்குள்ள இறைவன் அழைக்கப்படலானார்.
இறைவனை அடையும் நோக்கில், ஒவ்வொரு திங்கள்கிழமை இரவும் நள்ளிரவு பூஜை நடக்க இதுவே காரணம்.
கோயில் என்றதும் ராஜகோபுரம், கர்ப்பக்கிரகம், கல்மண்டபம் இருக்கும் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம். இயற்கையோடு இயைந்த இறைவன் பழைமையான ஆலமரத்தின் அடியிலேயே காட்சியளிக்கிறார். மரத்தடியில் சிவலிங்கம் போன்ற சிலைகளோ, சாமி உருவங்களோ கிடையாது. இங்கு மரமே மூர்த்தி, மரமே கருவறை, மரமே கோயில், மரமே தலவிருட்சம். தற்போது மர வேரில் லிங்கம் போன்று அலங்கரித்துச் சிவஉருவம் கொண்டுவந்துள்ளனர்.
இங்கு ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமை) இரவு 12 மணிக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பிறகு நடை சாத்தப்படும்.
பகலில் வழிபாடு கிடையாதா என்று நினைக்க வேண்டாம். வருடத்தில் ஒரே ஒருநாள் அதுவும் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தைப்பொங்கல் அன்று மட்டும் பகலில் கோயில் திறந்திருக்கும். இரவில் கோயில் பூட்டப்பட்டு விடும்.
இக்கோயில் ஆலமரத்தில் உள்ள இலைகளைப் பிரசாதமாக எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால் வீடு சுபிக்ஷமாக இருக்கும் என்பதும் நம்பிக்கை. இயற்கையுடன் இணைந்திருக்கும் பொது ஆவுடையாரை ஒருமுறையாவது தரிசிக்க முயற்சி செய்யலாமே.