

திருவரங்கனின் 108 திவ்யதேசங்களில் எட்டு மட்டும் சுயம்பு க்ஷேத்திரங்கள். அந்த எட்டில் ஒன்று தான் நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருத்தலம்.
முன்னொரு காலத்தில், சிந்து தேசத்து மன்னன் ஒருவன் தனது பரிவாரங்களோடு காட்டுக்கு வேட்டைக்குச் சென்றான். காட்டுக்குள் வழிதவறித் தனது பரிவாரங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட மன்னன், திக்குத் தெரியாது தவித்தான். அப்போது அந்த வனத்துக்குள் சிறு குடில் ஒன்றைக் கண்ட அவன், உள்ளே சென்று பார்த்தான். அங்கே சிறு பாத்திரத்தில் கொஞ்சம் உணவு இருந்தது. அலைச்சல் களைப்பில் இருந்த மன்னன் அந்த உணவை எடுத்து உண்டு பசியாறினான்.
சாபம் பெற்ற மன்னன்
குஷாணனா என்ற முனிவரின் குடிசை அது. தனது இஷ்ட தெய்வமான விஷ்ணுவுக்குப் படைப்பதற்காக உணவைத் தயாரித்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றிருந்தார் முனிவர். அந்தச் சமயம் பார்த்துத்தான் சிந்து மன்னன் அவரது குடிலுக்குள் நுழைந்து, படையலுக்கு வைத்திருந்த உணவை எடுத்து உண்டுவிட்டான். இதை அறியாத முனிவர், குளியலை முடித்துக்கொண்டு குடிலுக்குத் திரும்பினார். தனது குடிலுக்குள் மன்னன் ஒருவன் இருப்பதையும் இறைவனின் படையலுக்கு வைத்திருந்த உணவை அவன் உண்டுவிட்டதையும் அறிந்து கடும் சினம் கொண்டார் குஷாணனா முனி.
அந்த ஆத்திரத்தில், சிந்து மன்னனை நாயாகக் கடவது எனச் சபித்தார் முனிவர். தனது தவறை உணர்ந்த மன்னன், சாப விமோசனத்துக்கு வழிகேட்டு முனிவரிடம் மன்றாடினான். ’’இந்த தேசத்தின் உன்னதமான புண்ணிய தீர்த்தம் ஒன்றில் நீ நீராடும்போது உனது சாபம் தானாகவே நீங்கிவிடும்’’ என விமோசனத்துக்கு வழி சொன்னார் முனிவர்.
அதிலிருந்து நாய் ரூபத்திலேயே அந்த வனத்துக்குள் புண்ணிய தீர்த்தத்தைத் தேடி அலைந்த மன்னன் இறுதியாக ஓரிடத்தில் தாமரைத் தீர்த்தம் ஒன்றைக் கண்டான். முனிவர் சொன்ன தீர்த்தம் இதுவாக இருக்குமோ என நினைத்தபடியே தாமரைத் தடாகத்தில் இறங்கினான் மன்னன். மறு நிமிடமே அவனது சாபம் நீங்கி மானுட உருவெடுத்தான். அப்படி சாபம் நீங்கிய இடம்தான் தற்போது வானமாமலை பெருமாள் திருத்தலமாக விளங்குகிறது.
சாபம் நீக்கிய சேற்றுத் தாமரை தீர்த்தம்
நெல்லையிலிருந்து 25 கிலோமீட்டரில் உள்ள நாங்குநேரியில் அமைந்திருக்கிறது வானமாமலை பெருமாள் திருத்தலம். 108 திவ்யதேசங்களில் 48-வது திவ்ய தேசம் இது. சிந்து மன்னனுக்கு விமோசனம் கொடுத்ததாகச் சொல்லப்படும் இங்குள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடல் என நம்பப்படுகிறது. இத்திருத்தலத்தின் கருவறையில் அருள்மிகு தோத்தாத்திரி
நாதர் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்க, ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். நம்மாழ்வார் இத்தலத்து இறைவனை, ‘நோயற்ற நோன்பு’ எனப் பத்துப் பாசுரங்களில் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். இத்திருத்தலமானது, திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சிரீவரமங்கள நகர், தோத்தாத்திரி சேத்திரம், வானமாமலை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்து இறைவனுக்கு தினமும் எண்ணெயால் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த எண்ணெயானது கால் மிதிபடாமல் ஒரு கிணற்றில் ஊற்றப்படுகிறது. பிறகு அந்த எண்ணெயானது கிணற்றிலிருந்து பக்தர்களுக்குப் பிரசாதமாக எடுத்துத் தரப்படுகிறது. இந்தப் பிரசாதம் சகல நோய்களையும் தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்கிறது.
சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், தை அமாவாசை, எண்ணெய் காப்பு வைபவம், பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை இத்திருத்தலத்தின் முக்கியத் திருவிழா நாட்களாகும்.