

வரி வசூலிப்பவர்கள் மத்தியில் ஒரு நாள் உரையாற்றிக் கொண்டிருந்தார் யேசு. அப்போது அங்கே வந்த யூத குருமார்கள் சிலர் இதை கவனித்தனர். பாவிகள் என கருதப்படும் வரி வசூலிப்பவர்கள் மத்தியில் யேசு உரையாற்றுவது தவறு என அவர்கள் நினைத்தார்கள். அதைப் புரிந்துகொண்ட யேசு ஒரு கதை சொன்னார்.
“ஆட்டிடையன் ஒருவன் தன் நூறு ஆடுகளையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான். மாலை வீடு திரும்ப ஆடுகளை அழைத்தபோது ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. தொலைந்துபோன அந்த ஒரு ஆட்டைத் தேடுவதற்காக மற்ற 99 ஆடுகளையும் அதே இடத்தில் விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடுகிறான். கடைசியில் தன் ஆட்டைக் கண்டுபிடித்தும் விடுகிறான்.
கிடைத்த அந்த ஆட்டுக்குட்டியைத் தன் தோளில் பிரியமுடன் சுமந்து வருகிறான். வீடு திரும்பியதும் தன் குடும்பத்தாரையும் நண்பர்களையும் அழைத்து, தான் கண்டெடுத்த ஆட்டைப் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறான்.
அறிந்தோ அறியாமலோ பாவம் செய்கிறவர்கள், தொலைந்து போன அந்த ஆட்டைப் போன்றவர்கள்.
தங்கள் பாவச்செயல்கள் மூலம் இறைவனிடம் இருந்து விலகிச் செல்கிறார்கள்.
அவர்களை மீண்டும் இறைவனிடம் சேர்க்கும் பொருட்டே அவர்கள் மத்தியில் நான் பேசுகிறேன். காரணம் சாமானியர்களைவிட இவர்களே அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்” என்று கதையை முடித்தார் யேசு. பரிசேயர்களும் உண்மை உணர்ந்து அமைதியாகக் கலைந்து சென்றனர்.