

பாண்டிய மன்னனின் மன வருத்தம் போக்க சொக்கநாதரே வில்வமரத்து நிழலில் சுயம்புவாய் தோன்றிய திருத்தலம் இது என்கிறது தல வரலாறு.
ஒரு சமயம் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த அழகிய பாண்டியன் மதுரை மீனாட்சி – சொக்கநாதர் மீது ஆழ்ந்த பக்தியும் அளவற்ற அன்பும் கொண்டிருந்தான். தினமும் காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று மீனாட்சியையும் சொக்கநாதரையும் வழிபட்டுத் திரும்பிய பின்பு தான் அழகிய பாண்டியன் அன்றைய பணிகளைக் கவனிப்பான். இந்நிலையில் சேர மன்னன் புருஷோத்தமன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தனது ஆளுமையை நெல்லைச் சீமை வரைக்கும் செலுத்தத் திட்டமிட்டான்.
மனவருத்தம் கொண்ட பாண்டியன்
இதற்காக அவன் பெரும்படை திரட்டி மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக நெல்லை நோக்கிப் புறப்பட்டான். இதையறிந்த அழகிய பாண்டியன் மதுரையிலிருந்து தானும் பெரும்படை திரட்டி வந்து நெல்லையில் தற்போதையை பழைய பேட்டை இருக்கும் பகுதியில் முகாமிட்டுத் தங்கினான். இவ்விடத்தில் பாண்டியனின் ஆஸ்தான குருவான சுந்தர முனிவரும் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்து ஆலோசனைகள் வழங்கிவந்தார். எனினும் தினமும் காலையில் மீனாட்சியையும் சொக்கநாதரையும் தரிசிக்க முடியாமல் போனதால் வருத்தம் கொண்டான் பாண்டியன்.
வில்வ மரத்தடியில் சொக்கநாதர்
அந்த வருத்தத்துடன் அவன் தியானத்தில் இருந்தபோது, ‘சுந்தர முனிவர் ஆசிரமம் அமைந்திருக்கும் வனத்தில் வில்வமரத்தின் அடியில் இருக்கும் எறும்பு மணல் மேட்டின் அடியில் இருப்பேன் என்று அசரீரியாய் ஒலித்தார் சொக்கநாதர். இதைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடிய மன்னன் அப்போதே அந்த வில்வமரத்தைத் தேடி ஓடினான். சொன்னபடியே வில்வமரத்தின் அடியில் எறும்பு மணல் மேடு இருந்தது. ஆட்களைக் கொண்டு அதை தோண்டியபோது உள்ளே சுயம்புலிங்கமாய் காட்சியளித்தார் சொக்கநாதர்.
சொக்கநாதரின் சித்து விளையாட்டு
சொக்கநாதரைக் கண்ட மகிழ்ச்சியில் வந்த வேலையை மறந்த பாண்டியன், அங்கேயே மீனாட்சி, சொக்கநாதருக்கு கோயில் ஒன்றை எழுப்பி அங்கே தினமும் பூஜைகள் செய்து வழிபாடு செய்துவந்தான். இதுவே தனக்கான தருணம் என எண்ணிய புருஷோத்தமன், சமயம் பார்த்துப் படைகளை நெல்லையை நோக்கி நெருக்கினான். அப்படி வந்தவன் நெல்லைச் சீமையில் பாண்டியனின் படை முகாமைப் பார்த்து மிரண்டு போனான். தனது கைங்கர்யத்தால் சொக்கநாதர் பாண்டியனின் படைகளை மிகப் பிரம்மாண்டமாக்கிக் காட்டியதுதான் சேரனின் மிரட்சிக்குக் காரணம்.
இவ்வளவு பெரிய படையை வெல்வது கடினம் என்ற முடிவுக்கு வந்த புருஷோத்தமன், மாறுவேடத்தில் பாண்டியனின் முகாமுக்குள் வருகிறான். அப்போது பாண்டியனின் மகன் மனோன்மணியைக் கண்டவன் அவள் மீது மையல் கொள்கிறான். போரிட வந்த புருஷோத்தமன் நேராக அழகிய பாண்டியனைச் சந்தித்து, “நான் பாண்டிய நாட்டின் மீது போரிடத்தான் வந்தேன். ஆனால், உங்களை வெல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன். அதேசமயம், வந்த இடத்தில் உங்களது மகள் மீது காதல் கொண்டு விட்டேன். பகை மறந்து அவளை நீங்கள் எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்” என்று வேண்டினான். இதுவும் சொக்கனின் திருவிளையாடலே என முடிவுக்கு வந்த பாண்டியன், புருஷோத்தமனுக்கே தனது மகளை திருமணம் செய்து கொடுத்தான்.
மதுரை மீனாட்சியம்மனுக்கு நிகர்
இந்த நிகழ்வுக்குப் பிறகு நெல்லை சொக்கநாதர் ஆலயமும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நிகராகக் கொண்டாடப்பட்டது. நெல்லை தொடர்வண்டி நிலையத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கும் சொக்கநாத சுவாமி திருக்கோயில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது. மதுரை மீனாட்சிக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகம் நடப்பதில்லை. அதேபோல் இங்கேயும் மீனாட்சிக்கு பிரதோஷ நாளில் அபிஷேகம் இல்லை.
இத்திருத்தலத்தில் வடபுறமாக நின்று மீனாட்சியைத் தரிசனம் செய்தால் மதுரை மீனாட்சியைத் தரிசனம் செய்த பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. பிரதோஷ காலங்களில் இங்குவந்து சொக்கநாதரையும் அன்னை மீனாட்சியையும் வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடி வரும் என்பது ஐதிகம். மதுரை மீனாட்சிக்கு நடப்பது போன்றே இங்கேயும் சித்திரை மாதத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழா, மார்கழி திருவாதிரை, பங்குனியில் உத்திரத் திருவிழா பத்து நாட்களும் சொக்கநாதர் சுவாமி கோயிலின் முக்கியத் திருவிழா நாட்கள்.