

புனர்பூசம்
எந்த காரியத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டும் புனர்பூச நக்ஷத்திர அன்பர்களே, பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.
வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம்.
தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் அனைத்திலும் நன்மையே நடக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு மாத மத்தியில் பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: வெள்ளிதோறும் மஹாலக்ஷியை வணங்கி 7 வலம் வரவும்.
+ இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும்
- தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்
பூசம்
“தலைமைதளபதி தேளான்” என்பதற்கேற்ப சீரிய வீரத்தாலும், தனியாற்றலாலும் அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்க்கும் பூசம் நக்ஷத்திர அன்பர்களே, உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.
வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் பல நல்ல அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும்.
வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். பணத்தை நல்ல முறையில் சேமிப்பீர்கள். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும்.
மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய் ஹோரையில் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கோ அல்லது முருகன் கோவிலுக்கோ செனறு வரவும்.
+ எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.
- பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம்
ஆயில்யம்
அனைவருக்கும் எதிலும் அறிவுரை சொல்லத்தயங்காத ஆயில்யம் நக்ஷத்திர அன்பர்களே, சில நன்மைகளை அளிக்கும் வகையில் கிரகநாயகர்கள் சஞ்சரிக்கிறார்கள். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். ஆனாலும் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம்.
உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விளையாட்டுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமுர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.
+ குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும்
- வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம்