

ஆதியும் அந்தமும் இல்லாத சிவனைப் போற்றும் சிவ அஷ்டகம், சிவ மந்திரம், அஷ்டோத்ரம், சிவ அபிஷேக மந்திரம், சிவஸ்துதி எனப் பல்வேறு மந்திரங்கள் இருக்கின்றன. ஐந்தெழுத்து மந்திரமான `சிவாய நம’ பெருமையை நாதத்தின் வடிவிலும் தாளத்தின் வடிவிலும் அரூபமாக வெளிப்படுத்தும் பாடலைப் பாடியிருக்கிறார் அபிராமி அஜய்.
இந்த மகாதேவா.. மனோகரா.. மகா மந்திரா.. மகா மாயா.. பகவதி.. என அடுக்கடுக்காக விரியும் இந்தப் பாடலுக்கான தொடக்க இசையே காற்று இசைக் கருவியான புல்லாங்குழலின் அடர்த்தியான ஓசையில் ஏகாந்தமாக ஒலிக்கிறது. ஒரு செல் உயிரியில் தொடங்கி பல செல்கள் பல்கிப் பெருகும் பெரு உயிர்களின், பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை அறிவிப்பதுபோல் ஒவ்வொரு வாத்தியமும் பிரதான இசையோடு இரண்டறக் கலக்கிறது.
இந்த மலையாளப் பாடலை எழுதியிருப்பவர் அம்பலப்புழை மது. பாடலைப் பாடியிருக்கும் அபிராமியின் குரல், எந்த கேள்விக்கும் இடம் தராமல் பாடலோடு நம்மை ஒன்றவைக்கிறது. கர்னாடக இசைப் பயிற்சியை முறையாக எடுத்திருக்கும் அபிராமியின் குரலில் தேவைப்படும் இடத்தில் குழைவும் தேவைப்படும் இடத்தில் கம்பீரமும் சரிசமமாக வெளிப்படுகின்றன.
அருணகிரிநாதரின் திருப்புகழிலும், காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்திலும் வெளிப்படும் அரிய வகை தாளக்கட்டில் இந்தப் பாடலை அமைத்திருக்கின்றனர். பியானோ ரால்ஃபின் ஸ்டீஃபன், புல்லாங்குழல், சாக்ஸபோன் ராஜேஷ் கார்த்திக், பாஸ் கிடார் ஜஸ்டின், அகோஸ்டிக் கிடார் அபிஜித் ஸ்ரீநிவாசன், டிரம்ஸ் ரான்ஜு, தாளவாத்தியங்கள் ஆரோமல் முரளி ஆகியோரின் இசைப் பங்களிப்பில் ‘மகாதேவா’ பாடல் உலகத்துக்கான பாடலாக மாறியிருக்கிறது.