சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ கண்ணாடிப் பேழையில் கடல் நீர் வைத்து பூஜை

சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ கண்ணாடிப் பேழையில் கடல் நீர் வைத்து பூஜை
Updated on
1 min read

திருப்பூர்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில் இன்று (அக். 4) கடல்நீர் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் விநோத வழிபாடு நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இக்கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

இது குறித்து முருக பத்கர்கள் சிலர் கூறும்போது, ‘இத்தகைய கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன வகை பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்றும் அழைக்கப்படுகிறது’ என்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் இடிகரையைச் சேர்ந்த பெண் பக்தர் பவானி என்பவரின் கனவில் வந்ததாக கடல்நீர் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருள் கண்ணாடிப் பேழைக்குள் இன்று வைக்கப்பட்டது.

இவ்வாறு காட்சிக்கு வைக்கப்படும் பொருள் தொடர்பாக ஏதேனும் ஒரு சம்பவம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முன்னதாக கண்ணாடிப் பேழைக்குள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் பிரம்பு மற்றும் சூடம் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்குக் பிறகு பக்தரின் கனவில் வந்த கடல்நீர் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த பூஜைப் பொருள் மற்றொரு பக்தரின் கனவில் வரும் வரை, கண்ணாடிப் பேழைக்குள் இந்தப் பொருளை பக்தர்கள் பார்த்து வழிபாடுவார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in