பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தில், அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கும் அன்னை, விஷ்ணு துர்க்கை, துர்கா லட்சுமி, நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவக்கிரஹ நாயகி, நவராத்திரி நாயகி, நவகோடி நாயகி எனவும் போற்றப்படுகிறாள்.
ராஜராஜசோழன் முதலான சோழ மன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள்வாக்குப் பெற்றுச் செல்வது வழக்கம்.
சோழ மன்னர்களின் ஆட்சி முடிவுற்று, சோழன் மாளிகை முற்றிலும் அழிந்து விட்ட நிலையில், துர்க்கையம்மன், விநாயகர், சண்முகர், பைரவர் ஆகிய 4 தெய்வத் திருமேனிகளையும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலின் வடக்கு வாயிலில் தனி சந்நிதி பெற்று, பக்தர்களைக் காக்கும் அன்னையாக, சாந்த சொரூபத்துடன் துர்க்கையம்மன் விளங்குகிறாள்.
துர்க்கையம்மன், மகிஷன் தலை மீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், 8 திருக்கரங்களுடனுன், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு அருள்பாலிக்கிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கியதாகக் காணப்படும். இத்தலத்தில் அம்மனின் சாந்த சொரூபத்தை தெரிவிக்கும் நோக்கில் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.
அபயக் கரத்துடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளியைத் தாங்கி துர்க்கை அருள்பாலிக்கிறாள். ‘தன்னைச் சரணடைவோருக்கு வேண்டுவதை வழங்குவாள் துர்க்கை’ என்பது ஐதீகம். பரசுராமர் துர்காம்பிகையை துதி செய்து அமரத்துவம் பெற்றார் என்றும் கூறுவதுண்டு. ஆடி மாதத்தில் துர்க்கை வழிபாடு செய்வது இன்னும் சிறப்பு.
