பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

படங்கள்: நா.தங்கரத்தினம்
படங்கள்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 9ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இன்று (ஜூன் 3) காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக் கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்ளுக்கு காட்சியளிப்பார்.

விழாவின் 6ம் நாளான ஜூன் 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது.

நான்கு ரத வீதிகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஜூன் 12ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சியும், இரவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in