பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்

சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது
சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது
Updated on
2 min read

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.11) விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதையொட்டி, அதிகாலை, கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, சுவாமிகள் தேரில் அமர வைக்கப்பட்டனர். தேருக்கு கற்பூரம் ஏற்றப்பட்டு வடம் பிடிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வடக்கு ராஜ வீதி சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மாலையில், மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை அடிவாரத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை (சனி) காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது. 13-ம் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் மற்றும் மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ர.பழனிவேல், கோயில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளர் சி.மாணிக்கம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in