கழுகுமலை கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

கழுகுமலை கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
Updated on
2 min read

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூத்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன்கள் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவின் 7-ம் நாளான கடந்த 8-ம் தேதி மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சமாக (ருத்திரர்) எழுந்தருளி வீதியுலாவும், வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு பச்சை மலர்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

திருவிழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், விளா, காலசந்தி ஆகிய பூஜைகள் நடந்தன. காலை 7 மணிக்கு சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமான் கோ ரதத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தி வைரத் தேரிலும் எழுந்தருளினார்.

காலை 10.30 மணிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் அருணா சுப்பிரமணியன், துணை தலைவர் சுப்பிரமணியன், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதலில் சட்ட ரதமும், கோ ரதமும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த ரதங்கள் காலை 11.25 மணிக்கு நிலையை வந்தடைந்தன. அதனை தொடர்ந்து, வைர தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில், கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற கோஷங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் தெற்கு ரதவீதியில் இருந்து புறப்பட்டு கீழ பஜார் வழியாக மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இரவு 8 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். 10-ம் திருவிழாவான நாளை (11-ம் தேதி) தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தபசுக் காட்சியும், 12-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. 13-ம் தேதி பட்டினப் பிரவேசமும், 14-ம்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், சீர்பாத தாங்கிகள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in