புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி - நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகளை தரிசிக்க குவிந்த மக்கள்!

புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி - நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகளை தரிசிக்க குவிந்த மக்கள்!
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகளை தரிசிக்க மக்கள் குவிந்தனர். மக்களுக்கு இடையூறின்றி நகராட்சி பேட்டரி காரில் வந்து பக்தர்களுடன் ஆளுநரும் சாமி தரிசனம் செய்தார்.

புதுவை வைத்திக்குப்பம், வீராம்பட்டினம் கடற்கரைகளில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக தீர்த்தவாரியையொட்டி புதுவையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டது. இன்று வைத்திக்குப்பம் கடற்கரையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், கவுசிக பாலசுப்பிரமணியர், காளத்தீஸ்வரர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர் உட்பட பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.

ஒரே இடத்தில் அனைத்து கோயில்களின் சுவாமிகளையும் தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல், பக்தர்ளுக்காக குடிநீர், நடமாடும் கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகள் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் சேவையும் செய்யப்பட்டிருந்தத. காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது.

சுவாமிகளை தரிசனம் செய்ததுடன் பலரும் முன்னோருக்கு திதியும் தந்தனர். கடற்கரையில் உள்ளூர் மீனவர்கள் துணையோடு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல வீராம்பட்டினம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியிலும் பல்வேறு பகுதியிலிருந்து வந்த உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுவை வைத்திக்குப்பத்தில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து வாகனத்தில் கடற்கரைச்சாலை பழைய சாராய ஆலை வளாகம் வரைந்து அங்கிருந்து நகராட்சி பேட்டரி காரில் மாசிமகம் நடக்கும் பகுதிக்கு மக்களுக்கு இடையூரின்றி ஆளுநர் வந்தடைந்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் ஆளுநரை வரவேற்று அழைத்து சென்றனர்.தொடர்ந்து மதியம் மாசிமக தீர்த்தவாரிக்கு வந்த பக்தர்களுக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் அன்னதானம் வழங்கினார்.

மாசிமகத்தையொட்டி புதுவையில் நகர பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அஜந்தா சந்திப்பு வழியாக வந்த கார், கனரக வாகனங்கள் சிவாஜி சிலை வழியாக திருப்பிவிடப்பட்டது. ஏஎப்டி பஸ்நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வைத்திக்குப்பம், வீராம்பட்டினம் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக வழியெங்கும் நீர், மோர், பானகிரகம் உட்பட நீர் ஆகாரங்களும், பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in