

குன்னூர்: குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வி.பி. தெரு பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவசுப்பிரமணியர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்து அறநிலையத்துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டு காலமாக சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் சேவா சங்கத்தினர் திருப்பணிகளை மேற்கொண்டனர். பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த மாதம் 31-ம் தேதி, கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக விநாயகர் வழிபாடு, புண்யாகம் பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம். மகாலட்சுமி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு இன்று கோபுர கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வருதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அரசு கொறடா கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். விக்னேஷ்வர பூஜை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு தீர்த்த குடங்களுடன் சென்ற அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்பு அன்னதானம் நிகழ்ச்சி திருக்கல்யாண உற்சவம் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.