

கடலூர்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. சிவ சிவா என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி சுவாமிகள் வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது.
6-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலாவும், 7-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலாவும், 8-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும். 9-ம் தேதி வெள்ளியானை வாகன வீதிஉலாவும், 10-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், நேற்று (ஜன.11) தங்க ரதத்தில் பிச்சாடனார் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இன்று (ஜன. 12) தேர்த் திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்குள் மேலதாளம் முழங்கிட, தேவாரம், திருவாசகம் பாடிட, வேத மந்திரங்கள் ஓதிட, நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் இரவு 7 மணி அளவில் கீழவீதி நிலையை அடையும். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சுவாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். நாளை (ஜன.13) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானாகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும். 14-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் நடைபெறுகிறது. 15-ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணை செயலாளர் சுந்தர தாண்டவ தீட்சிதர் மற்றும் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். தேர் தரிசன விழாவையொட்டி கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.