மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை
Updated on
1 min read

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் 2 மாத காலம் நடத்தப்படுகிறது.

கோவை ஈஷா யோகா மையத்தின் 31-வது மஹா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன், சீனிவாசன், இந்து ஆகியோர் கூறியதாவது:

ஈஷாவில் நடைபெற உள்ள மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களது ஊரிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் கிழக்கு, தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை கோவையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 11-ம் தேதி தொடங்கி வைத்தார். வடக்கு, மேற்கு திசைகளில் பயணிக்கும் ரத யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாரும், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளும் கடந்த 22-ம் தேதி தொடங்கி வைத்தனர்.

மஹா சிவராத்திரிக்கு இன்னும் 2 மாத காலம் உள்ளது. அதுவரை, இந்த 2 ரதங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணிக்க உள்ளன. சென்னையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணா நகர், புரசைவாக்கம், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை ரத யாத்திரை நடைபெறும்.

இதேபோல, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிவாங்கா பக்தர்கள் ஆதியோகி உருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்தபடி ஈஷா நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர். இத்துடன் 63 நாயன்மார்களின் உருவங்களை தாங்கிய ஒரு தேரும் பாத யாத்திரையாக வருகிறது. ஈஷா மஹா சிவராத்திரி விழாவை நேரலை செய்ய 50 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in