

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை மீது நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் அருள் பாலிக்கிறார். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாள், திருவண்ணாமலையிலேயே தங்கியதால், இக்கோயில் 'தென் திருப்பதி' என அழைக்கப்படுகிறது.
திருப்பதி கோயிலுக்கு செல்ல இயலாத பக்தர்கள் திருவண்ணாமலை பெருமாளுக்கு அந்த நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்திவிட்டு செல்வர். இக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் 5 சனிக்கிழமைகளில் நடைபெறும் கருட சேவை பிரசித்தி பெற்றதாகும். இன்று புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் 2வது வார சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஶ்ரீனிவாச பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கருட சேவையும், கிரிவலம் நடைபெற உள்ளது.