பழநியில் தயாராகிறது ஒரே கல்லில் 24 அடி உயர கருப்பணசாமி சிலை!

பழநியில் தயாராகிறது ஒரே கல்லில் 24 அடி உயர கருப்பணசாமி சிலை!

Published on

பழநி: மதுரையில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பழநியில் ஒரே கல்லில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரையில் அருப்புக்கோட்டை பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோயிலில் பிரம்மாண்ட கருப்பணசாமி சிலையை பிரதிஷ்டை செய்ய, கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள சிற்பக் கலைக் கூடத்தில் சிலை வடிவமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 8 மாதங்களாக 3 சிற்பிகள் சேர்ந்து 70 டன் கருங்கல்லில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலையை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிலை வடிவமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட சிலை குறித்து பேசிய சிற்பி பாலு,"இந்தச் சிலையை வடிப்பதற்காக கரூரில் இருந்து 70 டன் எடையுள்ள ஒரே கருங்கல்லை வாங்கி வந்தோம். சிலை வடிவமைக்கும் போது செதுக்கப்பட்ட கழிவுகள் போக, தற்போது 40 டன் எடையில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று மதுரைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு, விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த சிலையின் மொத்த விலை ரூ.17 லட்சம் ஆகும்" என சிற்பி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in