

பழநி: பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று விண்ணை முட்டிய முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக் கோலத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளி, கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பங்குனி உத்திரத் திருவிழாவை யொட்டி நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, மலைக்கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, நேற்று காலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
கிரி வீதிகளில்... காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு விநாயகர், அஸ்திரத்தேவர் தேர்கள் முன்செல்ல, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருள, கிரி வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்இழுத்தனர். அப்போது ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று பக்தர்கள் முழக்கம் எழுப்பினர்.
நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, பழநி கோட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பிரதீப் தலைமையில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் இரவு 9 மணிக்கு சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 27-ம் தேதி இரவு 7 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.