மாசி திருவிழா: பழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

மாசி திருவிழா: பழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Updated on
1 min read

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. ‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா பிப்.9-ல் முகூர்த்தக்கால் ஊன்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிப்.13-ல் திருக்கம்பம் சாட்டுதல், பிப்.20-ல் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. திருக் கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று ( பிப்.28 ) மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் தேரேற்றம் நடந்தது.

‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன் நான்கு ரத வீதிகளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் நிறைவாக இன்று ( பிப்.29 ) அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல், இரவு நீராடலும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in