

கடலூர்; மாசிமக திருவிழா தீர்த்தவாரிக்கு கிள்ளைக்கு சென்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள் வரவேற்பு படையல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் ஆண்டுதோறும் மாசி மகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மாசி மகத்தை முன்னிட்டுகிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் மேலதாளம் முழங்கிட கிள்ளை கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.
அந்த வகையில், மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலர் கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர்.
ஆண்டுதோறும் கிள்ளை மாசி மகத் திருவிழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதன்படி ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கிள்ளை கடற்கரைக்கு வழக்கம் போல தீர்த்தவாரிக்கு வந்தது.கிள்ளை தைக்கால் பகுதியில் தர்க்கா டிரஸ்ட் நிர்வாகி சையது சக்ஹாப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் வரவேற்பளித்து சாமிக்கு படையல் செய்தனர். பின்னர் அதே பகுதியில் இருந்த தர்க்காவிற்கு அனைவரும் சென்று உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாத்தியா ஓதப்பட்டது. அனைவருக்கும் சர்க்கரை வழங்கப்பட்டது.
தர்காவில் படையல் செய்யப்பட்ட பொருள்களை ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில் பட்டாச்சாரியாரிடம் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில் மற்றும் சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் செயல் அலுவலர் ராஜ்குமார் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிள்ளை தர்கா டிரஸ்டி நிர்வாகி சையது சக்ஹாப் கூறுகையில், “இந்த நிகழ்வு எங்களது முன்னோர்கள் கடந்த 1892 ஆம் ஆண்டு முதல் செய்தி வருகிறார்கள் அதனை தொடர்ந்து நாங்களும் செய்து வருகிறோம். பூவராக சாமி வரும்போது மேல தாலங்களுடன் வரவேற்று அவர்கள் எடுத்து வரும் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு அதனை தர்காவில் வைத்து பார்த்தியா ஓதி நாட்டில் அனைவரும் சுபிட்சமாக இருக்கும் வகையில் அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டு அதனை மீண்டும் சாமியிடம் வழங்குவோம். அதனை பெற்றுக்கொண்டு சாமி கடற்கரைக்கு செல்வார்” என்றார்.
கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் ,திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், “இது பல ஆண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகிறது. இதனை கிளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரவேற்று வழி அனுப்பி வைப்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.