மாசி மகம்; விளக்கு எடுத்தால் ஒளிமயமான எதிர்காலம்! – இது திருக்கோஷ்டியூர் மகிமை

மாசி மகம்; விளக்கு எடுத்தால் ஒளிமயமான எதிர்காலம்! – இது திருக்கோஷ்டியூர் மகிமை
Updated on
1 min read

திருக்கோஷ்டியூர் செளம்ய நாராயண பெருமாள் கோயிலுக்கு வந்து, மாசி மகத்தில் தெப்பக்குளத்தில் விளக்கெடுத்துச் சென்றால், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்பது ஐதீகம். நாளை செவ்வாய்க்கிழமை 19.2.19 மாசி மகத் திருவிழா.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர் திருத்தலம். வைஷ்ணவ திவ்விய க்ஷேத்திரங்களில் ஒன்று. பெருமாளின் திருநாமம் செளம்ய நாராயணப் பெருமாள்.

நவகிரகங்களில் ஒருவர் புதன். இவரின் மைந்தன் புரூரவன், மகா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஒருமுறை புரூரவச் சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை, கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரவச் சக்கரவர்த்தி.

அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பிரவகித்து வந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.. அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார். தற்போது ஆலய பிராகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, ‘மகாமக கிணறு’ என்றே அழைக்கப்படுகிறது.

அதேபோல், இன்னொரு புராணச் சிறப்பும் திருக்கோஷ்டியூருக்கு உண்டு.

இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து கூடிப் பேசினார்கள். புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அந்த அவதாரமே நரசிம்ம அவதாரம். அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய இடமே கோஷ்டியூர். அதாவது கோஷ்டியாக எல்லோரும் கூடிப் பேசிய ஊர் என்பதால், திருக்கோஷ்டியூர் என்றானது. .

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்பெருமக்கள் மங்களாசாசனம் செய்த வைஷ்ணவ திருத்தலம் திருக்கோஷ்டியூர். 108 வைஷ்ணவ தலங்களில் முக்கியமான தலம் என்கிறார்கள் வைஷ்ணவர்கள்.

இத்தனை பெருமைகள் கொண்ட திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் உள்ள திருக்குளம் பிரசித்தம்.

மாசி மாதம் வந்துவிட்டால், தெப்பத்திருவிழா, பத்து நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் இந்த விழாவின் முக்கிய அம்சம்... திருத்தேரோட்டம். அதேபோல் இன்னொரு சிறப்பு... திருக்குளத்தில், பக்தர்களால் ஏற்றப்படும் விளக்கு. குளத்தில் விளக்கிட்டு வழிபட்டால், குலம் தழைக்கும்; சிறக்கும்; செழிக்கும் என்பது ஐதீகம். மேலும் பக்தர்கள் தங்களின் குறைகள் நிறைவேறுவதற்காக, குளக்கரையில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த விளக்குகளை எடுத்து வந்து, வீட்டில் தினமும் வழிபட்டு வந்தால், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்பது ஐதீகம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in