மகான்கள்: சேர்மன் அருணாசல சுவாமிகள்

மகான்கள்:  சேர்மன் அருணாசல சுவாமிகள்
Updated on
1 min read

சேர்மன் அருணாசல சுவாமிகள், 1880-ம் ஆண்டு அக்டோபர் 2-ல் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் பிறந்தார். ராமசாமி-சிவனனைந்த அம்மையார் ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். சிறு பிராயத்திலேயே அருணாசல சுவாமிகள் புத்திக் கூர்மையுடயவராக விளங்கியுள்ளார். அவருடைய பெற்றோர் அவருக்குப் பல கலைகளை முறையாகச் சொல்லிக்கொடுத்தனர். அருணாசல சுவாமிகளும் அனைத்துக் கலைகளையும் பொறுப்புடன் கற்றுத் தேர்ந்தார்.

பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஏரல் என்ற ஊருக்கு வந்து பக்தி யோகத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். அவரது பக்தி யோகத்தின் மகிமையால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அவரை வாழும் கடவுளாக வழிபட்டனர். தங்கள் பிரச்சினைகளையும், தீராத பிணிகளையும் அவரிடம் சொல்லி ஆறுதல் அடைந்தனர். அருணாசல சுவாமி மக்கள் அனைவருக்கும் தன் இறையருளால் ஆறுதல் கூறிவந்தார். இது மட்டுமல்லாது அருணாசல சுவாமிகள் தன் செயல்களின் மூலம் அங்குள்ள மக்களுக்கு நன்னடத்தைகளைக் கற்பித்து வந்தார்.

இந்தப் பண்புகளால் ஆங்கிலேயே ஆட்சியாளர் களின் நன்மதிப்பையும் மரியாதையையும் சுவாமிகள் பெற்றார். அவருக்கு மரியாதை செலுத்தும்படியாக ஏரல் பேரூராட்சியின் சேர்மனாகப் பதவி ஏற்கும்படி ஆங்கில ஆட்சியாளர்கள் வேண்டிக் கொண்டார்கள். அதன் படி 1906 செப்டம்பர் 5-ல் அருணாசல சுவாமிகள் ஏரல் சேர்மனாகப் பதவி ஏற்றார். மக்கள் சேவையாற்றத் தொடங்கினார். 1908 ஜூலை 27வரை அவர் சேர்மனாகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவர் பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.

சேர்மனாகப் பணியாற்றிய பிறகு அவர், ‘சேர்மன் அருணாசல சுவாமிகள்’ என அழைக்கப்பட்டார். ஒரு நாள் அருணாசல சுவாமிகள் தன் சகோதரர் கருத்தப் பாண்டியனிடம், “தம்பி, 1908-ம் ஆண்டு ஜூலை 28 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேரப் போகிறேன். இந்த ஊருக்குத் தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஆலமரத்தின் அருகில் தன்னைச் சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடுங்கள். அப்போது மேலே கருடன் வட்டமிடும்” என்று கூறினார்.

அவர் கூறியபடியே தம்பியும் செய்தார். அருணாசல சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார் அவரையும் இறைவனாகவே மக்கள் கருதுகிறார்கள் . அருணாசல சுவாமிகள் 28 வயது வரையிலும் திருமணம் செய்துகொள்ளவில்லை. மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் தன் வாழ்க்கை முழுவதையும் மக்கள் சேவைக்கும் மகேசன் சேவைக்கும் அர்ப்பணித்தார்.

அருணாசல சுவாமிகள் சமாதி ஆன இடத்தில் ஒரு கோயில் எழுப்பட்டுள்ளது. இன்று தென் மாவட்ட மக்கள் பலரின் பிரசித்தி பெற்ற திருத்தலமாக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் விளங்கி வருகிறது. இங்கு பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in