மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு

தைப்பூசத் திருவிழாவையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் | படங்கள்: ஜெ.மனோகரன்
தைப்பூசத் திருவிழாவையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் | படங்கள்: ஜெ.மனோகரன்
Updated on
2 min read

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜன.25) நடந்த தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடப்பாண்டுக்கான தைப்பூசத் தேரோட்டத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. தினமும் சிறப்பு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது. அதைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது.

இதற்காக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோ - பூஜை நடத்தப்பட்டது. காலை 4 மணிக்கு மூலவருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேக பூஜையும், தீபாராதனை போன்றவை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு எழுந்தருளினார். பின்னர், காலை 5 மணி முதல் 7 மணி வரை உற்சவர் அபிஷேக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. விரதம் இருக்கும் பக்தர்கள் கொண்டு வந்த பால் குடம் மூலம் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 7.30 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.

பக்தி முழக்கம் : பின்னர், அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில், விநாயகர், வீரபாகு, சூலத்தேவரும், பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் அரோகரா... அரோகரா... என பக்தி முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், தேரோட்டம் முடிந்தவுடன்,மாலை சுவாமி தேரில் இருந்து இறங்கினார். அதன் பின்னர், யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை ஆகியவை நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தைப்பூசத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று (ஜன.24) மாலையில் இருந்தே பக்தர்கள் மருதமலைக்கு பாத யாத்திரையாக வரத் தொடங்கினர்.பால்குடம் ஏந்தியும், காவடி ஏந்தியும், வேல் ஏந்தியும் பாத யாத்திரையாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் கோயிலுக்குச் சென்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி கோயிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in