வடபழனி முருகன் கோயிலில் இன்று தைப்பூசம்

வடபழனி முருகன் கோயிலில் இன்று தைப்பூசம்
Updated on
1 min read

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. தமிழ் கடவுள் என்று போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் பவுர்ணமி திதியில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டுபிறந்தது முதலே தைப்பூச கொண்டாட்டத்துக்கு பக்தர்கள் தயாராகி வந்தனர். முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள்கொண்டு வரும் பாலால், முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அந்தவகையில், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகளும், வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காவடி தூக்கி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். மேலும், பால் குடம் எடுத்து வருவோர், பொது தரிசனம் வருவோர் தெற்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

வடபழனி முருகன் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவியத் தொடங்குவார்கள் என்பதால் போலீஸார் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.

தைப்பூசத்தையொட்டி, இரவு 8.30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. காலை5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கந்தக்கோட்டம் முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in