பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்: நவ.18-ல் சூரசம்ஹாரம்

பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்: நவ.18-ல் சூரசம்ஹாரம்
Updated on
2 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.13) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நவ.18-ல் சூரசம்ஹாரம் நடக்கிறது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.13) நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இணை ஆணையர் மாரிமுத்து, உதவி் ஆணையர் லட்சுமி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மூலவர், விநாயகர், சண்முகர், மயில், துவார பாலகருக்கு காப்பு கட்டப்பட்டது. திருவிழாவையொட்டி, யானை கஸ்தூரி யானை பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றது. சூரசம்ஹாரம் வரை யானை கஸ்தூரி மலைக்கோயிலில் தங்கியிருக்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.18-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.

மாலை 3.15 மணிக்கு சின்னக் குமாரசுவாமி அசுரர்களை வதம் புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சன்னதி அடைக்கப்படும். திருஆவினன்குடி கோயிலில் பரா சக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6.00 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற உள்ளது.

இரவு 9.00 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று சம்ப்ரோட்சணம் பூஜைநடைபெறும். விழா நிறைவாக நவ.19-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம், மாலை 6.30 மணிக்கு மேல் பெரிய நாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக் குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in