

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி உற்சவம் வரும் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய திருவடியான கருடாழ்வாரின் அம்சமாய் விஷ்ணு சித்தர் அவதரித்தார். அவர் பெருமாளுக்கு கண்ணேறு கழிப்பதற்காக திருப்பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் என அழைக்கப்படுகிறார். இவர் ஆண்டாளை மகளாக வளர்த்து ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து வைத்தார். பெரியாழ்வாரே தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை அமைத்தார் என்பது வரலாறு.
ஶ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் அவதார தினமான திரு ஆனி சுவாதி உற்சவ விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திரு ஆனி சுவாதி உற்சவம் வரும் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதில் 23-ம் தேதி திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஆண்டாள் திருக்கோலமும், 24-ம் தேதி வானமாமலை ஜீயர் மண்டபத்தில் கருட சேவையும், 26-ம் தேதி தவழும் கிருஷ்ணர் திருக்கோலமும் நடைபெறுகிறது. 28-ம் தேதி காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.