

ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த சமீர் என்ற மருத்துவர் அக்டோபர் 5 ஆம் தேதி நம்பிக்கை அறிகுறியை வெளிப்படுத்தும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீர் பதிவிட்ட புகைப்படத்தில், பிறந்த பச்சிளம் குழந்தை அவரது முகத்திலிருந்து முகக் கவசத்தைக் கழற்றுகிறது. இந்தக் காட்சியைத்தான் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், நாம் முகக் கவசத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான காலம் வந்துவிட்டது என்றும் சமீர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத் தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.