Last Updated : 27 Jul, 2019 01:52 PM

 

Published : 27 Jul 2019 01:52 PM
Last Updated : 27 Jul 2019 01:52 PM

கலாம் ஊக்குவித்த கிராமத்து விஞ்ஞானி.. அரசு உதவிக்காக காத்திருப்பு: 'டாய்லட் கட்டிலை' உருவாக்கிய சரவணமுத்துவின் கதை இது..

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். இந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லை சரவணமுத்துவின் கண்டுபிடிப்புக்கு மிகமிகப் பொருத்தமாக இருக்கிறது.

யார் இந்த சரவணமுத்து எனக் கேட்கிறீர்களா? தென்காசிதான் இவரது சொந்த ஊர். தற்போது நாகர்கோயிலில் வசிக்கிறார். படித்தது என்னவோ 3-ம் வகுப்புதான். ஆனால், எப்போதும் ஏதாவது சிறு சிறு உபகரணங்களை வடிவமைப்பதும் அதனை இயக்கிப்பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். வெல்டிங்தான் பிரதான தொழில். கார் மெக்கானிசத்தை சொந்த ஆர்வத்தில் கற்றுக் கொண்டிருக்கிறார்.

கண்டுபிடிப்புக்கான ஆர்வம் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்க, சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு திட்டங்களை வடிவமைத்துக் கொடுப்பதில் மட்டுமே மகிழ்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்தார். 2015-ல் சரவணமுத்துவின் மனைவிக்கு அறுவைசிகிச்சை நடந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மூன்று மாத காலம் அவர் படுக்கையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மனைவி ஒவ்வொரு முறை இயற்கை உபாதையைக் கழிக்க நேரும்போதும் சிரமப்பட்டு கழிவறைக்குச் செல்வதையும், பிறரின் உதவியைச் சார்ந்தே இருக்க நேர்ந்த அவலத்தைப் பார்த்தும் வருந்தியிருக்கிறார்.

வருத்தத்தோடு நிற்கவில்லை. தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்ற அடிப்படையில் தன் மனைவிபோல் அவதியுறும் நோயாளிகள் குறிப்பாக பெண்களின் தேவைக்காக படுக்கையிலேயே டாய்லட் வசதியை ஏற்படுத்தினால் என்னவென்று யோசித்திருக்கிறார். அந்தத் தேடல் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அவரை இட்டுச் சென்றுள்ளது.

சிறிய அளவில் தன் சுய முயற்சியால் வீட்டிலிருந்த கட்டிலிலேயே சில மாறுதல்களைச் செய்து, அதில் ஒரு டாய்லட் கோப்பையையும் இணைத்திருக்கிறார். அதை பேட்டரி மூலம் இயங்கும்படி செய்திருக்கிறார். இயற்கை உபாதைக்கான நேரம் வரும்போது நோயாளி யார் உதவியுமின்றி கட்டிலில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் படுக்கைக்கு கீழ் உள்ள டாய்லட் கோப்பை சரியான இடத்தில் பொருந்திக் கொள்ளும்.

இன்னொரு பொத்தானை அழுத்தினால் தண்ணீர் பாய்ந்து கோப்பையை சுத்தம் செய்துவிடும். அந்தத் தண்ணீர் நேரடியாக செப்டிக் டாங்குக்கு செல்லும் வகையில் ஒரு பைப்பும், தண்ணீர் வருவதற்கு ஒரு பைப்பும் இணைத்திருந்தார் சரவணமுத்து. 12 AV பேட்டரியில் இயங்கும்படி இந்த கட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை செல்ஃபோன் சார்ஜ் செய்வதுபோல் சார்ஜ் செய்ய வேண்டும். ஒருமுறை இதனை சார்ஜ் செய்தால் 6 முறை பயன்படுத்த இயலும்.

இவரது கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உள்ளூர் செய்தித்தாளில் வெளியாக, இதுபோலவே தனக்கும் ஒன்று வேண்டுமென்று சென்னையிலிருந்து வந்த நபர் ஒருவரின் உதவியால் முதன்முறையாக பிரத்யேகமாக டாய்லட் கட்டிலை அவருக்கு வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் தனது கண்டுபிடிப்பை எப்படி வெளியுலகிற்கு எடுத்துச் செல்வது. எப்படி தன்னை அடையாளப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்திருக்கிறார் சரவணமுத்து.

அப்போதுதான் ஜோஸ்குமார் என்ற நண்பரின் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையின் எண் கிடைத்திருக்கிறது. ஒரு நாள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். தன்னைப் பற்றி கூறி குடியரசுத்தலைவர் கலாம் ஐயாவுடன் பேச வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். எதிர்முனையில் சரவணமுத்துவின் எண், விவரங்களைப் பெற்றுக் கொண்டு ஃபோனைத் துண்டித்துள்ளனர். 

பின்னர் அதேநாளில் 1.30 மணி நேரம் கழித்து குடியரசுத் தலைவர் மாளிகை என ட்ரூ காலரில் அடையாளம் தாங்கியபடி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. தயங்கியபடி அந்த அழைப்பை ஏற்றிருக்கிறார் சரவணமுத்து, நான் கலாம் பேசுகிறேன்.. என்ற குரல் ஒலிக்க சப்த நாடியும் ஒடுங்கிய நிலையில் போனில் பதிலளித்துள்ளார் சரவணமுத்து.

பின்னர் உற்சாகத்துடன் தனது கண்டுபிடிப்பு பற்றி கூறியிருக்கிறார்.  குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (National Innovation Foundation) என்ற மையத்துக்கு கண்டுபிடிப்பைப் பற்றி கடிதம் எழுதுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் கலாம் காட்டிய பாதையில் பயணிக்கத் தொடங்கினார் சரவணமுத்து. சரவணமுத்துவின் கழிவறை கட்டில் திட்டத்தை அங்கீகரித்த நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் அதன்பின்னர் தொடர்ந்து அவரது முயற்சிகளைக் கண்காணித்து வந்தது.

இறுதியாக இந்த ஆண்டு துவக்கத்திலேயே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்குமாறு சரவணமுத்துவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரும் அதற்கு ஆயத்தமாக, மார்ச் மாதம் கண்காட்சி நடந்திருக்கிறது. மொத்தம் 10 மாநிலங்களில் இருந்து இவரைப் போன்றே கிராமத்திலிருந்து கொண்டு கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் அழைக்கப்பட்டிருந்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றிருந்த அந்த விழாவில் திடீரென சரவணமுத்துவை மேடை ஏற்றி அவரது கண்டுபிடிப்பை சிறந்த கண்டுபிடிப்பாகத் தேர்வு செய்து பரிசு வழங்கியுள்ளனர். ரூ.3 லட்சம் ரொக்கம், கேடயம், சான்றிதழ் அத்துடன் மாதிரி கட்டிலை வடிவமைக்க தேவைப்பட்ட பணம் ரூ.67,000 என எல்லாவற்றையும் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. கிராமத்து விஞ்ஞானி என்ற சரவணமுத்துவின் கனவு நனவானது. ஆனால், அவருடைய காத்திருப்பு இன்றும் தொடர்கிறது.

இது குறித்து இந்து தமிழ் இணையதளத்திடம் சரவணமுத்து கூறியதாவது:

எனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால், என்னுடைய பொருளாதார சூழலை வைத்துக் கொண்டு இதை பெரியளவில் பலருக்கும் செய்து கொடுக்க இயலவில்லை. இப்போது ஒரே ஒரு கட்டிலைத் தயாரிக்க ரூ.70,000 வரை செலவாகிறது. ஒருவேளை எனக்கு வங்கிக் கடன் கிடைத்தால் இதனை நான் தொழிற்சாலை நிறுவி செய்ய இயலும்.

அப்போது ஒரு கட்டில் செய்ய ரூ.40000 மட்டுமே செலவாகும். இதனால், குறைந்த விலையில் அதிகம் பேர் பயனடைவார்கள். நிறைய பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுக்க இயலும். இதில், அரசாங்கம் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அரசாங்கம் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

இருந்தாலும் முழுக்க முழுக்க அரசாங்கத்தையே நிர்பந்திக்க இயலாது என்பதால் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி,  சமூக அக்கறை கொண்ட சிலர் கொடுத்த ஆதரவால் சிறியளவில் தொழிற்சாலையைத் தொடங்கவிருக்கிறேன்.

 

தன்னைப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வம் கொண்டவர்களுக்கு, "போக பாதையில்லை என்று கலங்கி நிற்காதே நீ நடந்தால் அதுவே பாதையாகும்.. என்ற கலாமின் வார்த்தையின்படி நான் பயணித்தேன். என்னைப்போன்ற சிந்தனை கொண்டவர்களும் இதையே கருத்தில் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

இன்னோவேஷன் விருது பெறுபவர்களுக்கு முன்னிருக்கும் சவால்கள் ஏராளம். அதனால், தோற்றாலும் கவலைப்படக்கூடாது. தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். முயற்சி தொடர்ந்தால் ஒரு நாள் நிச்சயம் வெற்றி வந்து சேரும்" என்றார்.

அப்துல் கலாமின் ஊக்குவிப்பால் கிராமத்து விஞ்ஞானி என்ற அடையாளத்தோடு முன்னேறியிருக்கிறார் சரவணமுத்து. கலாமின் நினைவு நாளான இன்று சரவணமுத்துவின்  கோரிக்கையை  அரசு நிறைவேற்றினால் அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றிதான். 

- பாரதி ஆனந்த்

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x