Last Updated : 13 Jun, 2019 03:39 PM

Published : 13 Jun 2019 03:39 PM
Last Updated : 13 Jun 2019 03:39 PM

‘‘18 வருட கனவு நனவாகியும் பாழாப்போன சாதியால சொந்த ஊரில் வேலை பார்க்க முடியல’’ - மதுரை ஜோதிலட்சுமி, அன்னலட்சுமி குமுறல்

18 வருட கனவு நனவாகியும் பாழாப்போன சாதியால சொந்த ஊர்ல வேல பார்க்க முடியல..  என்று புலம்புகிறார்கள் மதுரையை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்த பெண்கள் ஜோதிலட்சுமி, அன்னலட்சுமி.

ஜோதிலட்சுமி, அன்னலட்சுமி இவர்களின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் வலையப்பட்டி. கடந்த ஜூன் 3-ம் தேதி அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமன ஆணை பிறப்பிக்கப்பட்டபோது ஜோதிலட்சுமிக்கு பணியாளராகவும், அன்னலட்சுமிக்கு உதவியாளராகவும் பணி நியமனம் கிடைத்திருக்கிறது.

ஆனால், அந்தப் பணியில் தொடர முடியாமல் இருவரும் பணியிட மாறுதலாகித் தவிக்கின்றனர்.

வலையப்பட்டிக்குள் போலீஸ் முகாமிட்டிருக்கிறது. பதற்றத்தைத் தணிக்க போலீஸாரும் அதிகாரிகளும் அங்குள்ள உயர்சாதி இந்துக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

என்னதான் நடக்கிறது என்று நேரிடையாக தி இந்து தமிழ் திசை இணையதளம் சார்பாக அன்னலட்சுமி, ஜோதிலட்சுமியிடமே பேசினோம்.

ஜோதிலட்சுமி..

ஜோதிலட்சுமி எப்படி இருக்கீங்க? என்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினால் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார். மேடம் நான் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கேன். 18 வருடங்கள் கழித்து எனக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு. சொந்த ஊரில் அங்கன்வாடி பணியாளர் வேலை. ஆனால், அந்த வேலையைப் பார்க்க முடியல. எங்க ஊரில் இருக்க வேற சாதிக்காரங்க நான் தலித் என்பதால இங்க வேலை பார்க்கக் கூடாது என்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்துல அதிகாரிங்கள பிடிச்சு இடம் மாற்றம் வாங்கிவிட்டாங்க. இப்ப நான் மதிப்பனூர் அங்கன்வாடிக்கு மாற்றமாயிருக்கேன்.

பாழாப்போன சாதியால் நான் சொந்த ஊர்ல வேலை பார்க்க முடியல. 2 கி.மீ. நடந்து போய் பஸ் பிடிச்சு 10 கி.மீ. தள்ளியிருக்க மதிப்பனூர்ல வேலை செய்ய வேண்டியிருக்கு. 7000 ரூபாய் சம்பளம்னு சொன்னாங்க. ஆனா, பாதிக் காசு பஸ்ஸுக்கே போயிரும் போல இருக்கு. ராத்திரி படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. மனசுக்கு வருத்தமா இருக்கு. ஊர்ல போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்காங்க. எப்ப என்ன ஆகுமோன்னு இருக்கு.

அதெல்லாம் திரும்ப வலையப்பட்டியிலேயே வேலை போட்டுடலாம்னு சொன்னாங்களாம். ஆனா, ஒரு உத்தரவும் வரவில்லை. நிச்சயமா அந்த சாதிக்காரங்க எங்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஒருவேளை அரசாங்கம் சொல்லி செஞ்சாங்கனாலும் எங்க உசுருக்கு உத்ரவாதம் இல்ல.

அந்த சாதிப் பெரியவங்க கைப்பட எழுதிக் கொடுக்கணும். அப்பத்தான் நாங்க இங்க வேல பார்க்க முடியும். ஆனா, எங்களுக்கு எங்க சொந்த ஊர்லையேதான் வேலை பார்க்க ஆசை. இப்படி சொல்லி முடிக்கும் போது ஜோதிலட்சுமியின் குரல் கம்மியிருந்தது.

அன்னலட்சமி..

அவரைத் தேற்றி அன்னலட்சுமி பற்றி விசாரிக்க. இதோ பக்கத்துலதான் இருக்காங்க என்று தொலைபேசியை அவரிடமே கொடுத்தார். எப்படி இருவரும் சேர்ந்து இருக்கிறீர்கள் என்றேன். ஆவணங்களை சரிபார்க்க திருமங்கலம் குழந்தைகள் நலத்திட்ட அலுவலகம் வந்திருக்கிறோம் என்றார்.

சரி சொல்லுங்கம்மா.. எப்படி இருக்கீங்க என்றேன். என்னத்த சொல்ல.  வேல கெடச்சும் அலைகிறோம். எனக்கு கிழவனேரில மாற்றியிருக்காங்க. ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. அவுங்கல விட்டு எவ்வளவு தூரம் வேலைக்குப் போறது. சொந்த ஊர்லையே வேலைனும்னதும் எங்க மொத்த வீடும் அவ்வளவு சந்தோஷ பட்டுச்சு. அந்த கலெக்டர் நாகராஜன் சாருக்கு என்னிக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கோம்.

எத்தனையோ வருஷம் எத்தனையோ கலெக்டர் வந்தாங்க. யாருமே எங்களுக்கு வேலை தரல. ஆனா, இப்ப இவருதான் எங்களுக்கு வேலை போட்டார். ராவோடு ராவா வேல கிடைச்சிச்சு. ஆனா அது நிலைக்கலை பாருங்களேன். நாங்க இந்த சாதில பிறந்ததுதான் தப்பா. சாதி பாக்காம எங்கள வேலை பார்க்க விடுங்க. எங்க ஊர்ல இருந்து அங்கன்வாடி ஊருக்கு நடுவுல இருக்கு. அங்க போகனும்னா பயந்து வருது. நாங்க வலையப்பட்டியிலேயே வேலை பார்க்க யாராச்சும் உதவி பண்ண மாட்டாங்களான்னு இருக்கு’’ என்றார்.

தங்கள் பிள்ளைகளுக்கு தலித் உதவியாளர் சமைக்கக் கூடாது, தலித் பணியாளர் பாடம் நடத்தக் கூடாது என கடந்த 8ஆம் தேதி தலித் காலணியில் நுழைந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கதவுகள், வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அன்னலட்சுமி, ஜோதிலட்சுமியின் குமுறல் குறித்து வலையப்பட்டி விஏஓ அஸ்மீரியாவிடம் கேட்க அவரது தொலைபேசி எண்ணை பலமுறை தொடர்பு கொண்டோம். அது தொடர்ச்சியாக தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறது.

டி.ஆர்.ஓ. சாந்தகுமார் விளக்கம்:

இதுதொடர்பாக டிஆர்ஓ சாந்தகுமார் அவர்களிடம் தி இந்து தமிழ் திசை இணையதளம் சார்பாக பேசினோம்.

அவர் கூறுகையில் ‘‘அன்னலட்சுமி, ஜோதிலட்சுமி இருவருமே தாங்கள் பணியிட மாறுதல செய்யப்பட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களை பணியிட மாறுதல் செய்யவில்லை. கூடுதல் பொறுப்பாக அன்னலட்சுமியை கீழவனேரியிலும். ஜோதிலட்சுமியை மதிப்பனூரிலும் வேலை பார்க்கச் சொல்லப்பட்டுள்ளது. இது வாய்மொழி உத்தரவுதான். அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை நாங்களே அவர்களுக்கு விளக்க முற்படுகிறோம்’’ என்றார்.

அப்படியென்றால் அந்த ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அன்னலட்சுமி, ஜோதிலட்சுமி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லையா?

திருமங்கலம் பிடிஓ அலுவலகத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால், இப்படியான புகார்கள் அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவிக்காது.

ஏன் அன்னலட்சுமியும், ஜோதிலட்சுமியும் வலையப்ட்டியில் வேலை பார்க்கவில்லை?

அங்கு நிலவும் சாதிப் பிரச்சினையால் அங்கன்வாடிக்கு குழந்தைகள் வரவில்லை. அதனால் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வேறு இடத்தில் வேலை செய்ய சொல்லப்பட்டுள்ளது.

ஒருவேளை அங்கன்வாடிக்கு குழந்தைகள் வந்துவிட்டால் மீண்டும் அவர்கள் இருவரும் வலையப்பட்டியிலேயே பணி செய்ய முடியுமா?

நிச்சயமாக முடியும்.

அப்போது அந்த ஊர் சாதிக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்..?

அரசாங்க ஊழியர்களை அவர்களின் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று கிரிமினல் நடவடிக்கை தான் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x