Last Updated : 15 Jun, 2019 03:33 PM

Published : 15 Jun 2019 03:33 PM
Last Updated : 15 Jun 2019 03:33 PM

#தவிக்கும் தமிழ்நாடு ட்ரெண்ட் தெரிந்த உங்களுக்கு தண்ணீர் மேலாண்மை பற்றி தெரியுமா?- இது அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான கேள்வி

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அதுவும் தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு எல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஐடி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

சென்னைவாசிகளின் சோகத்தைப் புரிந்து கொள்ளாமல்கூட பிரச்சினை செய்யும் ஊழியர்கள் சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்

ஆனால், விஷயத்தின் வீரியம் நாம் நினைத்துப் பார்ப்பதைவிட அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில்தான் ஊடக கவனம் முழுமையாக தண்ணீர் பஞ்சம் பக்கம் திரும்பியுள்ளது. அப்படி தனியார் தொலைக்காட்சியால் #தவிக்கும்தமிழ்நாடு ட்ரெண்டாக்கப்பட அது தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் ட்ரெண்டாவதால் அது பெருமைக்குரிய விஷயமல்ல, வேதனைக்குரிய விஷயம்.  இன்று ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆவதால் இப்படி ஒரு பிரச்சினை நிலவுவது பற்றி வேண்டுமானால் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படலாம்.

ஆனால், உண்மையான விழிப்புணர்வு தண்ணீர் மேலாண்மை பற்றியதாகவே இருக்க வேண்டும். ஏனெனில், தண்ணீர்  பிரச்சினை மக்களாலும் அரசாங்கத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி சற்று விரிவாகவே அலச வேண்டும் என்ற எண்ணத்தில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் மெட்ராஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் மையத்தின் பேராசிரியர் சிவசுப்பிரமணியத்திடம் பேசினோம்.

தண்ணீர் பஞ்சம் புதிதல்ல..

முதலில் இயற்கையைப் பற்றிய புரிதல் நமக்கு வேண்டும். இந்த உலகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது புதிய விஷயமல்ல. புரிதலுக்காக 5 வருடக் கணக்காக எடுத்துக் கொள்வோம். 5 வருடங்களில் ஒரு வருடம் நன்றாக மழை பெய்யும், ஒரு வருடம் மழை பொய்க்கும், இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் ஓராண்டாவது வறட்சி ஏற்படும். இது மாறி மாறி நிகழும் என்கிறது அறிவியல். எப்போதுமே நமக்கு ஓராண்டு நல்ல மழை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நன்றாக மழை பெய்யும் காலத்தில் அரசாங்கமும் மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டாலே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் அளவுக்கு இருக்காது. மழை பெய்யும் காலத்தில் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்பது அரசுக்கும் மக்களுக்கும் தெரிய வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

இந்திய அரசியல் சாசனத்தின்படி மெட்ரோ நகரங்களில் ஒருநபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்குவது அரசாங்கத்தின் கடமை எனக் கூறப்பட்டிருக்கிறது. அதுவே கிராமங்களில் தலைக்கு 40 லிட்டரும், டவுன்களில் அவற்றின் அளவைப் பொறுத்து தலா 70 லிட்டர் முதல் 90 லிட்டர் வரையிலும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால், அரசாங்கமும் தண்ணீர் இருந்தால்தானே கொடுக்கும். சென்னை போன்ற நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏதாவது ஒரு வேலை என்ற தேடலில் கிராமத்திலிருந்து வருபவர்கள் பின்னர் இங்கேயே தங்கிவிடுகின்றனர். இதுவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணம்.

சரி அரசாங்கத்தின் தரப்பில் செய்ய வேண்டியவை என்னவென்று பார்க்கலாம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக் கூடிய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் இப்போது வறண்டு கிடக்கின்றன. இதுபோன்ற காலங்களில் அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தினால் இந்த ஏரிகளில் அடுத்த மழைக்காலத்தில் கூடுதலாக 15 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்கலாம். ஜனவரி தொடங்கி ஜூன் வரை 6 மாத காலம் மழையில்லை. சென்னையில் நல்ல மழை பெய்து 197 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், அடுத்த 5 மாதங்களில் நிச்சயமாக மழை வாய்ப்பு இருக்கிறது. அதனால், ஏரிகளை உடனடியாகத் தூர் வார அரசாங்கம் முன்னெடுப்புகளைத் தொடங்க வேண்டும்.

2015-ல் சென்னையில் பெருமழை கொட்டியபோது இதே அரசுதான் ஆட்சியில் இருந்தது. அடுத்த ஆண்டு 2016-லேயே தண்ணீர் தட்டுப்பாடு வந்தது. ஏரிகளை வறண்ட காலங்களில் தூர்வாரி வைத்திருந்தாலே கொள்ளளவு கூடியிருக்கும். ஆக, மழைநீரைத் தேக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இதேபோல் தமிழகம் முழுவதும் 40,000-க்கும் மேல் ஏரிகள் இருக்கின்றன. பல இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன. எந்த ஏரியும் முழுமையாக பராமரிக்கப்பட்டதாக இல்லை. இதெல்லாம் அரசாங்கத்தின் பலவீனம் என்றே நான் சொல்வேன்.

கையில் வழி இருந்தும் அதைவிட்டுவிட்டு கடல்நீரை குடிநீர் ஆக்குகிறேன் என்கிறார்கள். துபாய் போன்ற நாடுகளில் வேறு வழியே இல்லாமல் அப்படி ஒன்றைச் செய்யலாம். ஆனால், இங்கு தமிழகத்தில் மழையே பெய்வதில்லையா என்ன? பெய்யும் மழை நீரைச் சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலே போதுமானது.

மழைநீர் சேகரிப்பு அவசியம்

முதல் விஷயம் நீர்நிலைகளின் மேலாண்மை. இரண்டாவது விஷயம் மழைநீர் அறுவடை. உதாரணத்துக்கு சென்னையை எடுத்துக்கொள்வோம். இங்குள்ள அரசு கட்டிடங்கள், அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது கட்டாயமாக்கினாலே எவ்வளவு தண்ணீரை அறுவடை செய்ய முடியும்.

கிரவுண்ட் வாட்டர் ஸ்டோரேஜ் வசதியெல்லாம் தொழில்நுட்ப மேம்பாட்டால் கட்டிடங்களைப் பாதிக்காத அளவுக்கு செய்யும்படி வளர்ந்துவிட்டது. எனவே, அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழகம் முழுவதும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். மழை பெய்யும்போது சேமிக்கும் நீரில் 60% பயன்பாட்டுக்கு கிடைக்கும். எஞ்சியவை ஆவியானாலும்கூட 60% என்பது ஒரு அலுவலகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்கும். அதைவிடுத்து அரசாங்கம் கல்குவாரி தண்ணீரை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் தண்ணீர் மேலாண்மையில் மைனஸ் புரிதலில் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்வேன். யானைப் பசிக்கு சோளப் பொறி போடும் பணியைத்தான் அரசாங்கம் செய்கிறது.

நதிநீர் இணைப்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசி மட்டுமே கொண்டிருக்காமல் செயல்படுத்தினால் அதுவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும்.

வீடுகளுக்கு மானியம்..

அரசாங்கம் இதை தனது இடங்களில் கட்டாயமகச் செய்யும்போது மக்களிடமும் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கலாம். அரசு 50% முதல் 70% வரை வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த மானியம் வழங்கலாம். 2003-ல் ஜெயலலிதா ஆட்சியின்போது மானியம் வழங்கப்பட்டது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். எனது நண்பர் ஒருவர் தாம்பரத்தில் அவரது வீட்டில் 85,000 லிட்டர் கொள்ளளவில் மழை நீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்திருக்கிறார். நல்ல மழை பெய்யும் காலத்தில் அவர் அந்த நீரை அறுவடை செய்தாலே அவருடைய குடும்பத்தினருக்கு ஓராண்டுக்கான நீர்த்தேவை பூர்த்தியாகிவிடும்.

மக்கள் புரிதல் இன்னமும் மோசம்..

அரசாங்கத்தின் தண்ணீர் மேலாண்மை கொள்கை மைனஸில் இருக்கிறது என்றால் மக்களின் புரிதல் இன்னமும் மோசமாக இருக்கிறது. தண்ணீர் இருக்கும்போது தாறுமாறாகச் செலவழிப்பது. தண்ணீர் பற்றாக்குறை வந்துவிட்டால் அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்தப் பழியையும் போட்டுவிடுவது. ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு அமல்படுத்துவதே மக்கள் செய்யக்கூடிய எளிமையான தண்ணீர் மேலாண்மை முறையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தண்ணீரை எப்போதுமே சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் தண்ணீர் மேலாண்மை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். வசதி வாய்ப்புள்ளோர் தங்கள் வீடுகளில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்தால் அதற்கான வாய்ப்பு இல்லாதோர்க்கு அரசாங்கம் லாரிகள் மூலம் தண்ணீரை விநியோகிக்க முடியும். வசதி இருந்து லாரி தண்ணீர் நமக்கென்று இருப்பது சுயநலமாகும்.

எல்லா நேரங்களிலும் அரசாங்கம் மட்டுமே செயல்பட வேண்டும் என்று நினைப்பதும் தவறு. கடந்த முறை கர்நாடகா மாநிலம் உபரி நீரை பெருமளவில் காவிரியில் திறந்துவிட்டது. ஆனால், அதை மக்கள் சேமித்தார்களா? விவசாயிகளே சேர்ந்துகூட சில இடங்களில் தூர்வாரினால் போதுமான அளவு தண்ணீரை சேகரித்திருக்கலாமே. வந்த தண்ணீரை விட்டுவிட்டு அரசாங்கமும், மக்களும் மீண்டும் கர்நாடகத்திடம் தண்ணீர் கோரிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் மேலாண்மை மட்டுமே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க ஒரே வழி. இதை அரசாங்கமும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் என்னைப் போன்றோர் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால், அடுத்துவரும் மழைக்காலத்தில் தண்ணீரை போதுமான அளவு தேக்கிவைக்க இந்த அரசு ஆயத்தப் பணிகளைச் செய்திருக்கிறதா என்றால் பூஜ்யம் தான் பதில். மக்களாவது விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா என்றால் அதற்கும் பூஜ்யம்தான் பதில்''.

இவ்வாறு சுப்பிரமணியம் கூறி முடித்தார்.

எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கும். தண்ணீர் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. தண்ணீர் மேலாண்மை பற்றி அரசுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டாலே அடுத்த #தண்ணீர் தன்னிறைவு என்று ட்விட்டரில் ட்ரெண்டாக்கி தமிழகத்தை தலை நிமிரச் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x