Last Updated : 10 Mar, 2018 11:39 AM

 

Published : 10 Mar 2018 11:39 AM
Last Updated : 10 Mar 2018 11:39 AM

கடல் + சூரியன் = குடிநீர்: இளம் விஞ்ஞானியின் எளிய சூத்திரம்

பு

துச்சேரி மாநிலம் பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மைக்கேல்ராஜ், சூரிய ஒளி மூலம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.

‘இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் அளவு கடல் நீரை குடிநீராக்கி பெற முடியும். அதையே விரிவுபடுத்தினால் ஒரு கிராமம் பயன்பெறும் அளவுக்கு குடிநீர் பெற முடியும்’ என்கிறார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் புதுச்சேரி அரசின் கல்வித்துறையும் இணைந்து நடத்திய மாநில அளவிலான ‘இன்ஸ்பைர்’ அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்தத் திட்ட மாதிரி, டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகி இருக்கிறது.

பல கிராமங்களில் அடிப்படை தேவைக் கான நீரை பெற பல கிமீ தொலைவு வரை பயணிக்க வேண்டி இருக்கிறது. நம்மை சுற்றியிருக்கிற கடல் நீரை குடிநீராக மாற்றும்போது மக்களின் அடிப்படை தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். கடல்நீரை குடிநீராக்க தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்துக்கு பெரும் பொருட்செலவு ஆகும். அந்த பெருந்திட்டங்கள் போல் இல்லாமல், எளிமையான தொழில்நுட்பம் மற்றும் குறைந்த செலவில் முழுக்க சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக மாற்றுவதுதான் இதில் உள்ள விஷேசமே.

“இந்த திட்டம் தேசிய அளவில் வெற்றிபெறும்பட்சத்தில், ஜப்பான் நாட்டுக்கு கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை பற்றி அறிய மைக்கேல்ராஜ் அழைத்துச் செல்லப்படுவார்” என்கிறார் மைக்கேல்ராஜின் குருநாதரான ஆசிரியர் குருநாதன்.

மைக்கேல்ராஜ் நம்மிடம் பேசும்போது, “ஒரு பெரிய தொட்டியில் கடல் நீரை செலுத்தி அதை ஒளி ஊடுறுவல், ஒளி குவிப்பு, ஒளி எதிரொலிப்பு, சூரிய ஆற்றல் சூடுபடுத்துவான் (சோலார் ஹீட்டர்) போன்ற பல வழிகளில் சூடுபடுத்தி ஆவியாக்க வேண்டும். அதில் இருந்து வரும் நீராவியை குழாயின் வழியாக நிலத்தின் கீழ் உள்ள தொட்டிக்கு அனுப்ப வேண்டும். இதனால், வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக நீராவி குளிர்ந்து குடிநீராக மாறிவிடும்.

நான் வடிவமைத்த மாதிரி மூலம், சூழலுக்கு தீங்கில்லாத இந்த பசுமையான ஆற்றல் மூலம் சராசரியாக 2 லிட்டர் கடல்நீரை, இந்த சூரிய ஒளி ஆற்றல் முறையில் காய்ச்சி வடிகட்டும் போது ஒரு லிட்டர் குடிநீரைப் பெறலாம். இந்த மாதிரி திட்டத்துக்கு எனக்கு பெரிய அளவில் செலவு எதுவும் ஆகவில்லை. மொத்த செலவே 2,500 ரூபாய் ஆனது. இதையே நாம் பெரிய அளவில், திட்டமிட்டு வடிவமைத்தால் ஒரு வீட்டுக்கு அல்லது ஒரு கிராமத்துக்கு தேவையான குடிநீரை பெற முடியும். பெரிய அளவில் ஒரு பிளான்ட் அமைக்கும் போது சோலார் பேனலுக்கான செலவே முக்கியமானதாக இருக்கும். மற்றபடி பெரிய செலவு பிடிக்காது” என்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.

நீருக்காகத்தான் எதிர்காலத்தில் உலகப்போர்கள் நடக்கும் என ஆருடம் கூறப்பட்டு வரும் நிலையில், மைக்கேல்ராஜ் போன்ற விஞ்ஞானிகளின் மாதிரி திட்டம் செயல்வடிவம் பெறும்போது, அந்த போருக்கான அவசியமே இல்லாமல் போகும். வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x