Last Updated : 17 May, 2019 03:57 PM

Published : 17 May 2019 03:57 PM
Last Updated : 17 May 2019 03:57 PM

டெல்லியில் கேஜ்ரிவால் சாதித்ததைவிட தமிழகத்தில் கமல் அதிகமாக சாதிப்பார்: திருப்பரங்குன்றம் மநீம வேட்பாளர் நம்பிக்கை

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சாதித்ததைவிட தமிழகத்தில் கமல் அதிகமாக சாதிப்பார் என திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசனின் ஒரு கருத்து டெல்லி வரை அரசியல் களத்தைப் பரபரபாக்கிய நிலையில் ஆம் நான் சொன்னது உண்மைதான் சரித்திர உண்மை என்று திருப்பரங்குன்றத்தில் சக்திவேலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும்போது தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அடுத்த சில மணி நேரங்களில் கமலை நோக்கி காலணி வீச்சு நடந்தது. திருப்பரங்குன்றம் பரபரப்புச் செய்தியானது.

இத்தகைய சூழலில் திருப்பரங்குன்றத்தில் மநீமவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேட்பாளர் சக்திவேலை தி இந்து தமிழ் திசைக்காக பேட்டி கண்டோம்.

அவருடனான பேட்டியிலிருந்து:

பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது. திருப்பரங்குன்றத்தில் மநீம செல்வாக்கு எப்படி இருக்கிறது?

மிக மிக சிறப்பாக இருக்கிறது. மக்கள் திமுக, அதிமுக கட்சிகள் மீது வெறுப்பாக இருக்கிறார்கள். நான் செல்லும் ஒவ்வொரு தெருவிலும் மக்கள் என்னை வரவேற்கின்றனர். நேர்மறை சிந்தனையே மேலோங்குகிறது. தொகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் என்னை இதுவரை வாழ்த்தியுள்ளனர். ஒரு பெரியவர் என் தலையில் கைவைத்து சாமி சத்தியமா நீ தான் வெற்றி பெறுவ என்று சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதுவும் எங்கள் மூலம் மாற்றம் வர வேண்டும் என விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தான் வெற்றி பெறும்.

திமுக, அதிமுக மீது அதிருப்தி என்றால் அமமுகவை தேர்வு செய்யவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா?

இல்லை. நிச்சயமாக இல்லை. அமமுக அதிமுகவின் அதிருப்தி அணிதான். பெயர் மட்டுமே வேறு. மக்கள் விரும்புவது மாற்றத்தை. ஊழலற்ற ஆட்சியை. அதை எங்களால்தான் தர முடியும். அதனால்தான் வெற்றி பெறுவோம் என்கிறேன்.

தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது எதை முன்வைத்து பேசுகிறீர்கள்?

தொகுதிக்குள் நீங்கள் ஒருமுறை வந்து பாருங்கள். தெருவெங்கும் சாக்கடை, காலி குடங்களுடன் பெண்கள், அரசுப் பள்ளி மாணவிகள் கழிவறைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தவிப்பு என அரசாங்கத்தின் தோல்வியை சொல்லும் சாட்சிகள் நிறைய இருக்கின்றன. அந்த சாட்சிகள் தான் எங்களின் ஆதாரம். அவற்றை சீர் செய்வது எங்கள் லட்சியம். அதைத்தான் வாக்குறுதியாக முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கிறோம். ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்.

உங்கள் தலைவர்.. உங்கள் பார்வையில்..

நான் அடிப்படையில் ரஜினி ரசிகன். கமல் படங்களைப் பார்த்ததுகூட இல்லை. ஆனால், கமலின் மய்ய அரசியலில் நாட்டம் ஏற்பட்டு அவரது கட்சியில் இணைந்த பின்னர் அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அவருடன் நெருங்கிப் பழகியபோதுதான் அவர் உண்மையிலேயே எவ்வளவு மய்யமானவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர் இன்னொரு புத்தர் என்பேன். காந்தி, காமராஜருக்குப் பின்னர் ஒரு நல்ல தலைவராக கமல்ஹாசன் இருப்பார்.

டெல்லியில் கேஜ்ரிவால் - தமிழகத்தில் கமல்ஹாசன் ஒப்பீடு செய்ய முடியுமா?

நிச்சயமாக செய்யத் தகுதி இருக்கிறது. கேஜ்ரிவால் டெல்லியில் செய்ததைவிட தமிழகத்தில் கமல்ஹாசன் அதிகமாக சாதிப்பார். தமிழகத்தில் கல்வித் தரத்தை, அரசுப் பள்ளிகளின் தரத்தை டெல்லியைக் காட்டிலும் பலமடங்கு உயர்த்திக் காட்டுவார். நிச்சயமாக கமல்ஹாசன் தமிழக முதல்வராவார்.

கமல் மீதான சமீபத்திய விமர்சனங்களைப் பற்றி..

அவர் பேச்சில் தவறேதும் இல்லை. அவர் சொன்னதுபோல் அது வரலாற்று உண்மை. இன்றும்கூட பழைய செய்தித்தாள்களை எடுத்துப் பாருங்கள் காந்தி கொலை பற்றி என்ன பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும். அவர் மீதான விமர்சனங்கள் தேவையற்றவை.

தொகுதிக்குள் பணப்பட்டுவாடா ஏதும் நடக்கிறதா?

ஜோராக நடக்கிறது. ரூ.1000, ரூ.1500 என கட்சிகள் கொடுக்கின்றன. ஒரு வீட்டில் 5 ஓட்டு இருந்தால் இரண்டு கட்சிகளும் கொடுக்கும் காசு ஒரு பெருந்தொகையாகவே சேர்ந்துவிடும் அளவுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரே ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. கொடுக்கவும் செய்யாது. ஆனாலும் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். எங்கள் பணத்தைத்தான் எங்களுக்கே லஞ்சமாகக் கொடுக்கிறார்கள் என்று மக்களே கூறுகிறார்கள். காசை வாங்குவோம் வாக்கு உங்களுக்கே என உறுதியாகக் கூறுகிறார்கள்.

மநீமவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சொல்லுங்கள்?

லஞ்ச ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் நம் பிள்ளைகள் வாழப்போகிறார்கள்; நம்மவர் நம்மோடு சேர்ந்து ஆளப்போகிறார். இது நனவாக மநீம-வுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x