Last Updated : 16 Apr, 2019 01:53 PM

 

Published : 16 Apr 2019 01:53 PM
Last Updated : 16 Apr 2019 01:53 PM

அரண்மனை சென்டிமென்ட்டில் நயினார்; வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக வதுந ஆனந்த்: ராமநாதபுரம் இறுதிக்கட்ட கள நிலவரம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கைக் கொண்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, அமமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வதுந ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 18-ல் நடைபெறுவதால் இன்று இறுதிக்கட்டப் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

தொகுதியின் கடைசி நாள் கள நிலவரம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக வதுந ஆனந்த் இருப்பார் என்றளவில் இருக்கிறது.

அரண்மனை சென்டிமென்ட்

இந்நிலையில், ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை அரண்மனை பாயின்ட்டில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். அரண்மனைப் பாயின்ட்டுக்கு ஒரு சென்டிமென்ட் இருக்கிறதாம். இங்கு பிரச்சாரத்தை நிறைவு செய்தால் வெற்றி எளிது என்பதே அந்த சென்டிமென்ட். அதனாலேயே நயினார் நாகேந்திரன் இங்கு பிரச்சாரத்தை நிறைவு செய்யவுள்ளார். திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியும் இதே பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இலக்கு 5 லட்சம்.. கிடைப்பது?!..

ராமநாதபுரம் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தல் போக்கைப் பார்த்தால் அதிமுகவின் அன்வர் ராஜா 4 லட்சம் வாக்குகள் பெற்றார். பாஜகவின் குப்புராம் 1 லட்சம் வாக்குகள் பெற்றார். இந்த முறை அதிமுகவும்  பாஜகவும் கூட்டணியில் இருக்கின்றன. இந்நிலையில் 5 லட்சம் வாக்குகள் என்ற இலக்கோடு அதிமுக - பாஜக கூட்டணி களப் பணியாற்றினாலும்கூட அதிமுகவிலிருந்து பிரிந்து தனி சக்தியாக நிற்கும் அமமுகதான் இறுதிக்கட்ட நிலவரப்படி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நயினாருக்கு தொகுதியில் அதிமுகவினர் முழுவீச்சில் இறங்கி வேலை செய்திருந்தால் வெற்றி எளிதாகியிருக்கும். ஆனால், சூழல் அப்படி இல்லையே. அன்வர் ராஜா ஆட்கள் நயினாருக்காக வேலை செய்தனர்.

ஆனால், அதிமுக மேல் அதிருப்தி இருந்தாலும்கூட அமமுகவில் சேராமலும் அதிமுகவுக்கும் வேலை செய்யாமலும் இருக்கும் கிளை, நகர, மண்டல உறுப்பினர்கள் பலரால்தான் நயினாருக்குத் தலைவலி என்கின்றனர் கள விவரம் அறிந்தவர்கள். அதனால் இலக்கு 5 லட்சத்தை எட்ட முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தீர்மானிக்கும் சக்தியாக வதுந ஆனந்த்

ராமநாதபுரத்தில் அதிமுக வாக்குகளை வெகுவாகப் பிரிப்பார் எனக் கருதப்படும் வதுந ஆனந்த் எவ்வளவு ஓட்டுகள் பிரிக்கிறாரோ அதைப் பொறுத்தே வெற்றி நயினாருக்கா அல்லது நவாஸ் கனிக்கா என்பது உறுதியாகும்.

அமமுக சார்பில் நிற்கும் வதுந ஆனந்த் மட்டுமே ராமநாதபுரத்துக்காரர். மற்ற இருவரும் வெளியூர்க்காரர்கள். ஆனந்த் தனது பிரச்சாரங்களில் எல்லாம் தன்னை மண்ணின் மைந்தர் என்ற அடையாளத்துடனேயே முன்னிலைப்படுத்துகிறார்.

 

 

அவரது தந்தை அதிமுக அமைச்சராக இருந்ததால் அவருக்கு அதிமுக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன.

நயினாருக்கு பலம் அதிமுக பிளஸ் இந்து ஓட்டுகள். நவாஸுக்கு பலம் மோடி எதிர்ப்பாளர்கள், சிறுபான்மையினர் வாக்குகள். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி வாக்குகள்தான் ஆனந்தின் பலம். அந்த பலம்தான் நயினார், நவாஸின் பலவீனம்.

சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி நிர்ணயமாகும் சூழல் இருக்கிறது.

ரித்தீஸ் இழப்பால் தவிக்கும் அதிமுக

ஜே.கே.ரித்தீஷின் திடீர் மறைவு அதிமுகவினரின் உற்சாகத்தைக் குறைத்திருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கருணாஸை வெற்றி பெற வைத்ததே ரித்தீஷ் தான். தேர்தல் என்று வந்துவிட்டால் களத்தை அறிந்து எவ்வளவு பணம் அடிக்கலாம் என சொந்தக் காசைக்கூட செலவு செய்து வெற்றியை உறுதி செய்பவர் ரித்தீஷ். ஆனால், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னாள் அவர் மறைந்தது சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொகுதிக்குள் அமமுக சார்பில் ரூ.300 கொடுக்கப்பட்டுள்ளதாம். ரூ.500 வரை தர ஆளுங்கட்சியும் ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. பரமக்குடி இடைத்தேர்தலுக்கு ஓட்டுக்கு ரூ.3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், இந்த நிமிடம்வரை பட்டுவாடா ஏதும் நடக்கவில்லை என்பதே களத் தகவல்.

இப்படிப் பண்ணிட்டாரே பிரதமர்? சலசலத்த மக்கள்:

அண்மையில் ராமநாதபுரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி 20 நிமிடங்கள் மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்தார். எச்.ராஜா மொழிபெயர்த்து வழங்கினார். அவர் சொதப்பலாக மொழிபெயர்ப்பு செய்தாலும்கூட பிரதமர் சென்ற பின்னர் மக்கள் எச்.ராஜாவைவிட்டுவிட்டு பிரதமரையே விமர்சிக்கத் தொடங்கினர்.

மேடையில் நயினார் நாகேந்திரன் இருந்தார்.. எச்.ராஜா இருந்தார்.. தமிழிசை இருந்தார்.. அதிமுகவின் மனோஜ் பாண்டியன் இருந்தார். இவர்களில் ஒருவரைக் கூட அறிமுகப்படுத்தி பேசாமல் சென்றுவிட்டாரே என்று சலசலத்துக் கொண்டனர். அந்தக் கூட்டத்துக்கு 15,000 பேர் அமர மேடை போடப்பட்டிருந்தாலும் வந்தது என்னவோ 20,000-க்கு அதிகமானோர் என்கிறது போலீஸ் தகவல். நயினாருக்கு ஆதரவு இருந்தாலும் ஆனந்த் வாக்குகளே அவர் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என அடித்துச் சொல்கின்றனர் உள்ளூர் அரசியல் நிலவரம் தெரிந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x